NATIONAL

கைகலப்பில் மியன்மார் ஆடவர் மரணம்- பெண் உள்பட எண்மர் கைது

ஜொகூர் பாரு, ஏப் 4- ஆடவர் ஒருவர் உயிரிழப்பதற்கு காரணமான
கைகலப்பு தொடர்பில் ஒரு பெண் உள்பட எட்டு மியன்மார் பிரஜைகளை
போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கைகலப்புச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு உலுதிராம், தாமான்
டேசா செமர்லாங்கில் நிகழ்ந்ததாக ஸ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் முகமது சோஹய்மி இஷாக் கூறினார்.

இந்த கைகலப்பு தொடர்பில் போலீசார் நேற்று முன்தினம் இரவு 11.45
மணியளவில் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 22 முதல் 51 வயது
வரையிலான ஏழு ஆண்களும் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும்
கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் நிகழ்ந்த வாடகை அறை ஒன்றில் நடத்தப்பட்ட தொடக்கக்
கட்டச் சோதனையில் அக்கும்பலைச் சேர்ந்த சிலர் மது போதையில்
சண்டையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக அவர் சொன்னார்.

இந்த சம்பவத்தின் போது கூரிய ஆயுதத்தால் நெஞ்சின் இடதுபுறத்தில்
குத்தப்பட்ட 32 வயது ஆடவர் உயிரிழந்த வேளையில் 51 வயது
ஆடவருக்குக் கையில் காயம் ஏற்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில்
குறிப்பிட்டார்.

உயிரிழந்த ஆடவரின் சடலம் பரிசோதனைக்காக ஜொகூர் பாரு, சுல்தான்
இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட வேளையில்
காயமுற்ற நபர் அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக
அவர் மேலும் சொன்னார்.

கைதான அனைவரும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ்
விசாரணைக்காக வரும் 6ஆம் தேதி வரை தடுத்து
வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Pengarang :