SELANGOR

1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பட்டாசுகள் அடங்கிய 627 பெட்டிகள் பறிமுதல்

ஷா ஆலம், ஏப்.5: பந்திங்கில் உள்ள ஒரு கடையில் நேற்று நடத்திய சோதனையில் சுமார் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான பட்டாசுகள் அடங்கிய 627 பெட்டிகளைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அச்சம்பவம் தொடர்பாக நான்கு உள்ளூர் ஆட்களை கைது செய்தனர்

மாலை 6 மணியளவில் கிள்ளான் பகுதியில் பொருட்களைப் பெற்றுக் கொண்டிருந்த லாரியைப் பின்தொடர்ந்து லாரியில் இருந்து பட்டாசு பெட்டிகளை கிடங்கில் இறக்கிக் கொண்டிருந்த போது நான்கு பேரும் கைது செய்யப் பட்டதாகக் கோலா லங்காட் மாவட்டக் காவல் துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் அஹ்மத் ரித்வான் முகமது நோர் @ சலே கூறினார்.

“இந்தச் சோதனையின் போது, ரிங்கிட் 1.67 மில்லியன் மதிப்பிலான பல்வேறு வகையான பட்டாசுகள் அடங்கிய 627 பெட்டிகளுடன் ஒரு லாரியையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

காவல்துறையின் ஆரம்ப விசாரணையில் சோதனையிடப் பட்ட இடம் அதிகாரிகளிடமிருந்து எந்த அனுமதியையும் பெறவில்லை என்றும், கடந்த ஜனவரி முதல் இயங்கி வருவதாகவும் நம்பப்படுகிறது என்று அஹ்மத் ரித்வான் கூறினார்.

கைது செய்யப்பட்ட 19 வயது முதல் 39 வயது வரை உள்ள அனைவரும் தற்போது மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வெடிபொருள் சட்டம் 1957 பிரிவு 8ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப் பட்டதாகவும் அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :