NATIONAL

சபா ஏர் நிறுவனத்தின் டபுள் சிக்ஸ் விமான விபத்து மீதான இறுதி அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும்

புத்ராஜெயா, ஏப் 6- சுமார் 47 ஆண்டுகளுக்கு முன்னர் சபாவில் நிகழ்ந்த
சபா ஏர் நிறுவனத்தின் டவுள் சிக்ஸ் விமான விபத்து தொடர்பான இறுதி
அறிக்கையைப் பகிர அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கடந்த 1976ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்த விமான விபத்தில் அப்போதைய
சபா மாநில முதலமைச்சர் துன் புவாட் ஸ்டீபன்ஸ் மற்றும் பல
அமைச்சர்கள் உயிரிழந்தனர்.

கடந்த 1976ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் மேதி நிகழ்ந்த “டபுள் சிக்ஸ்“ என
வர்ணிக்கப்படும் இந்த விமானப் பேரிடர் தொடர்பான அறிக்கை அடுத்த
வாரம் வெளியிடப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறினார். இந்நோக்கத்திற்காக 1972ஆம் ஆண்டு அதிகாரத்துவ இரகசிய
பாதுகாப்புச் சட்டத்தின் (சட்டம் 88) 2சி பிரிவின்படி அந்த அரசாங்க
இரகசிய ஆவணம் மறுவகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

அந்த சபா ஏர் விமான விபத்து தொடர்பான முழு அறிக்கை அரசாங்க
மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம்
வெளியிடப்படும் என்று நேற்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்
செய்தியாளர்களிடம் அவர். தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினரின் நலன் கருதியும்
அந்த விபத்தின் பின்னணி குறித்து அறிந்து கொள்ள விரும்பும் சபா
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாகவும் இந்நடவடிக்கை
எடுக்கப்படுகிறது என்றார் அவர்.

மேலும், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைப் போக்கை கடைப்பிடிக்கும்
ஒற்றுமை அரசாங்கத்தின் கொள்கைக்கேற்பவும் விமானப் பேரிடர்
தொடர்பான அறிக்கையைப் பகிரங்கப்படுத்தும் நடவடிக்கை
மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :