NATIONAL

தீ விபத்தில் ஏழு வயது ஸ்ரீ லாவண்யா கருகி மரணம்- பினாங்கில் துயரம்

பினாங்கு, ஏப் 10- மூன்று வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு வயது
நிரம்பிய ஜி.லாவண்யா எனும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த வேளையில்
50 வயதான அவரின் பாட்டி கைகளில் காயங்களுக்குள்ளானார்.

இந்ததுயரச் சம்பவம் பினாங்கு, ஆயர் ஹீத்தாம், ஜாலான் பாயா தெருபோங்கில்
உள்ள கம்போங் பீசாங்கில் நேற்றிரவு நிகழ்ந்ததாகப் பெரித்தா ஹரியான்
செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தீவிபத்து குறித்து தாங்கள் இரவு மணி 11.19 அளவில் புகாரைப்
பெற்றதாக பினாங்கு மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
துணை இயக்குநர் ஜூல்பஹாமி சுதாஜி கூறினார்.

பாயா தெருபோங் மற்றும் ஜாலான் பேராக் தீயணைப்பு
நிலையங்களிலிருந்து 18 பேர் கொண்ட தீயணைப்புக் குழுவினர் சம்பவ
இடத்திற்கு விரைந்தாக அவர் சொன்னார்.

புக்கிட் பெண்டேரா, பாகான் ஆஜாம், ஜாலான் பேராக், பாடாங் லாலாங்
மற்றும் ஆயர் ஹீத்தாம் ஆகிய இடங்களிலிருந்து 50 பேர் கொண்ட
தன்னார்வ தீயணைப்புப் படையினரும் தீயை அணைப்பதில் தங்களுக்கு
உதவியதாக அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தை அடைந்த போது ஒன்றோடொன்று நெருக்கமாக
கட்டப்பட்டிருந்த மூன்று வீடுகளில் தீ கொளுந்து விட்டு எரிவதை
தீயணைப்பாளர்கள் கண்டனர். விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்
பின்னிரவு 12.45 மணியளவில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள்
கொண்டு வந்தனர் என்றார் அவர்.

தீ ஏற்பட்ட வீட்டில் எழு வயது சிறுமி ஒருவர் சிக்கிக் கொண்டது
தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் மேலும்
கூறினார்.

சம்பவ இடத்திற்குச் செல்வதற்கு முறையான சாலை வசதி இல்லாதது
மற்றும் 150 மீட்டர் தொலைவிலுள்ள பிரதான சாலையிலிருந்து குழாய்மூலம் நீரை எடுக்க வேண்டிய நிர்பந்தம் காரணமாக தீயை அணைப்பதில் தாங்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியதாக அவர் தெரிவித்தார்.

அந்த சிறுமியின் சடலம் வீட்டின் பிரதானக் கதவிலிருந்து சுமார் 8 மீட்டர்
தொலைவில் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. தீ ஏற்பட்ட போது
அச்சிறுமி படுக்கையறையில் சிக்கிக் கொண்டது தெரியவருகிறது என்றார்
அவர்.


Pengarang :