NATIONAL

சமூக சேவையில் ஆலயங்கள் முனைப்புக் காட்ட வேண்டும்- டத்தோ ரமணன் வலியுறுத்தல்

சுங்கை பூலோ, ஏப்.11- வசதி குறைந்த இந்திய குடும்பங்களுக்கு அடிப்படை உதவிகளை வழங்குவதில் சுற்று வட்டாரத்திலுள்ள இந்து ஆலயங்களும் முனைப்பு காட்ட வேண்டும் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் 
ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

அரசு கேந்திரங்களும் நாடாளுமன்ற – சட்டமன்ற அலுவலகங்களும் மக்களின் துயர் போக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், இந்து ஆலய நிர்வாகத்தினரும் அம்முயற்சிகளுக்கு கரம் கொடுத்து தங்களின் சமூகக் கடப்பாட்டினை நிறைவேற்றலாம் என அவர் ஆலோசனை கூறினார்.

முன்னதாக, சுங்கை பூலோ பெரிய மருத்துவமனைக்கு அருகே உள்ள ஸ்ரீ சிவ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் சனிக்கிழமை அன்று அனுசரிக்கப்பட்ட பங்குனி உத்திர விசேஷப் பூசையில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், டத்தோ ரமணன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்து சமய நம்பிக்கைகளுக்கு உயிரூட்டி வருகின்ற இந்து ஆலயங்கள், நமது சமய 
அடையாளமாக விளங்கி வருவதோடு மட்டுமல்லாமல், நமது தமிழர் கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் ஆணிவேராகவும் திகழ்ந்து வருகின்றன. 

ஆலயத்தின் பங்களிப்பானது இதோடு நின்று விடாது, நம் இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் துணை நிற்க வேண்டும். அந்த இலக்கு நோக்கிய பயணத்தின் தொடக்கமாக, சுற்றுப்பகுதியைச் சேர்ந்த வசதி குறைந்த குடும்பங்களின் சோகக் 
கண்ணீரை துடைக்க வல்ல ஒரு சிறு சமூகக் இயந்திரமாக ஆலயங்கள் உருமாற்றம் காண வேண்டும்.

இதற்கு என்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், நாடாளுமன்ற உறுப்பினருக்கான (எம்.பி.) முழு சம்பளத்திலிருந்து ஒரு வெள்ளியைக் கூட எடுக்காமல், அவற்றை அப்படியே இத்தொகுதியிலுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு பகிர்ந்தளித்து வருகின்றேன் என டத்தோ ரமணன்  சுட்டிகாட்டினார்.

இரு வாரங்களுக்கு முன், பண்டார் பாரு சுங்கை பூலோவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ ராஜ மாரியம்மன் ஆலய நிர்வாகத்திடம், தமது எம்.பி. சம்பளத்திலிருந்து கனிசமான நிதியை டத்தோ ரமணன் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில், தங்களின் ஆலய விசேஷத்தில் டத்தோ ரமணன் திடீரென கலந்து கொண்டதில் தாங்கள் மன நிறைவு கொள்வதாக ஆலயத் தலைவர் ரெ.துரைசாமி தெரிவித்தார். 

ஆலய நிர்வாகத்திற்கும்  டத்தோ ரமணனின் மக்கள் சேவை மையத்துக்கும் 
இடையிலான பரஸ்பர நல்லுறவு  வலு பெற்றிருப்பதற்கும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Pengarang :