NATIONAL

சீனச் சுற்றுப்பயணி மிரட்டி பணம் பறிக்கப்பட்ட விவகாரம்- விசாரணை அறிக்கை டி.பி.பி.யிடம் தாக்கல்

கோலாலம்பூர், ஏப் 12- அண்மையில் டத்தோ ஓன் சாலை சுற்று
வட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர் தம்மை மிரட்டிப் பணம் பறித்ததாக சீன
நாட்டு சுற்றுப்பயணி ஒருவர் சுமத்தியப் புகார் தொடர்பான விசாரணை
அறிக்கை துணை சட்டத்துறைத் தலைவரின் அலுவலகத்திடம் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணை தொடர்பில் இதுவரை எழுவரிடம் வாக்குமூலம் பதிவு
செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் இடைக்கால போலீஸ் தலைவர்
டத்தோ யாஹ்யா ஓத்மான் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 385வது பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு மேல் நடவடிக்கை எடுப்பது
தொடர்பில் சட்டத் துறை அலுவலகத்தின் பதிலுக்காக தாங்கள்
காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நட்புறவான
பயணம் மற்றும் பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்குச் செல்லும் இயக்கத்தை
தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சீன நாட்டுப் பயணி தாயகம் திரும்பி விட்டதால் அவரிடம்
இன்னும் வாக்குமூலம் பெறப்படவில்லை என்று யாஹ்யா மேலும்
சொன்னார்.

தனது கடப்பிதழை ஹோட்டலில் வைத்து விட்டுச் சென்றதால்
போலீஸ்காரர் ஒருவருக்கு 200 வெள்ளி பணம் செலுத்த வேண்டிய நிலை
ஏற்பட்டதாக டிக் டாக் செயலி வாயிலாக வெளியிட்ட காணொளியில்
அந்த சீனப் பயணி குற்றஞ்சாட்டியிருந்தார்.


Pengarang :