NATIONAL

குற்றச் செயலில் ஈடுபட்டதாக மிரட்டிய போலி போலீஸ்காரர்களிடம் குடும்ப மாது வெ.500,000 இழந்தார்

ஈப்போ, ஏப் 12- தொலைபேசி மிரட்டல் கும்பலின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி
பெரும் தொகையை இழந்தது தொடர்பில் குடும்ப மாது ஒருவரிடமிருந்து
போலீசார் புகாரைப் பெற்றுள்ளனர்.

ஈப்போவைச் சேர்ந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த குடும்ப மாது
சுமார் 500,000 வெள்ளியை அந்த மோசடிக் கும்பலிடம்
பறிகொடுத்துள்ளதாகப் பேராக் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ
முகமது யூஸ்ரி ஹசான் பாஸ்ரி கூறினார்.

இந்த மோசடி தொடர்பானப் புகாரை கிரியான் மாவட்ட போலீஸ்
தலைமையகத்தின் வர்த்தக க் குற்றப்புலனாய்வுப் பிரிவு கடந்த
சனிக்கிழமை பெற்றது என அவர் தெரிவித்தார்.

இந்த மோசடிச் சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்துள்ளது. தங்களை
காப்புறுதி முகவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் எனக் கூறிக்கொண்ட
நபர்கள், போலி பணக் கோரிக்கையை முன்வைத்த தாவும் சட்டவிரோத
சூதாட்டம் மற்றும் மிரட்டல் தொடர்பான குற்றங்களில்
ஈடுபட்டுள்ளதாகவும் அந்த மாதுவை தொலைபேசி வழி மிரட்டியுள்ளனர்
என்று அவர் சொன்னார்.

விசாரணையின் ஒரு பகுதியாக வங்கிக் கணக்கின் விபரங்களை தரும்படி
அந்த மாதுவை மிரட்டிய அக்கும்பல் பின்னர் பணத்தை தங்கள் வங்கி
கணக்கிற்கு மாற்றும்படியும் வற்புறுத்தியுள்ளது என்றார் அவர்.

தாம் ஏமாற்றப்பட்டதை பின்னர் உணர்ந்த அந்த மாது இந்த விஷயத்தை
தன் குடும்பதாரிடம் தெரிவித்துள்ளார். வங்கிக் கணக்கை சோதித்த போது
அதிலிருந்து 459,754 வெள்ளி காணாமல் போனது கண்டு பிடிக்கப்பட்டது
என்று முகமது யூஸ்ரி தெரிவித்தார்.

இத்தகை மோசடிக் கும்பல்களினால் அதிகமானோர் ஏமாற்றப்படுவதாக
கூறிய அவர், இத்தகைய கும்பல்களின் மோசடி வலையில் விழாதிருக்க
முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தினார்.


Pengarang :