NATIONAL

பத்தாங் காலியில் மைசெல் அடையாளப் பத்திர பதிவு நடவடிக்கை- 220 பேர் பங்கேற்றனர்

பத்தாங் காலி, ஏப் 17- பத்தாங் காலி தொகுதியில் இம்மாதம் 12ஆம் தேதி
நடத்தப்பட்ட மைசெல் பிரிவின் அடையாளப் பத்திர பதிவு
நடவடிக்கையில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 220 பேர் பங்கு கொண்டனர்.

இங்குள்ள பத்தாங் காலி சமூக மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்
கலந்து கொண்டவர்கள் பிறப்பு பத்திரம், சிவப்பு அடையாளக் கார்டு
மற்றும் குடியுரிமை உள்பட தாங்கள் எதிர் நோக்கும் அடையாள ஆவணப்
பிரச்சனைகளை மைசெல் அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.

மைசெல் பிரிவின் சார்பில் இந்த நிகழ்வில் பங்கேற்ற இரு அதிகாரிகள்
அடையாளப் பத்திரங்களுக்கான விண்ணப்பங்களைச் செய்ய வேண்டிய
வழிவகைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

உலு சிலாங்கூர் தொகுதியில் இரண்டாவது முறையாக இத்தகைய
நிகழ்வை மைசெல் பிரிவுடன் இணைந்து தாங்கள் நடத்துவதாக பத்தாங்
காலி தொகுதிக்கான இந்திய சமூகத் தலைவர் ராஜன் கண்ணன் கூறினார்.

இந்த நிகழ்வில் மூன்று இனங்களையும் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு
குடியுரிமை தொடர்பான பிரச்சனைகளை முன்வைத்தனர். இதற்கான
விண்ணப்பங்களை புத்ராஜெயாவிலுள்ள தேசிய குடிநுழைவுத் துறையிடம்
சமர்ப்பித்து தகுதி உள்ளவர்களுக்கு அடையாளப் பத்திரங்களைப் பெற்றுத்
தருவதற்கான தொடர் நடவடிக்கைகளை மைசெல் அதிகாரிகள்
முன்னெடுப்பர் என்றும் அவர் சொன்னார்.

இந்த குடியுரிமை பதிவு நிகழ்வில் சிறார்கள் முதல் எண்பது வயது
முதியவர்கள் வரை கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :