ANTARABANGSA

எச்சரிக்கையுடன் இருப்பீர்- சூடானில் உள்ள மலேசியர்களுக்கு அறிவுறுத்து

கோலாலம்பூர், ஏப் 17- சூடானில் தற்போது நிலவி வரும் நெருக்கடி
நிலையைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் இருக்கும்
அதேவேளையில் சிறிது காலத்திற்கு வெளியில் செல்வதையும்
தவிர்க்கும்படி அந்நாட்டிலுள்ள மலேசியர்கள் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளனர்.

சூடானிலுள்ள மலேசியர்கள் அந்நாட்டிலுள்ள மலேசியா தூதரகத்தை
எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அடுத்தக் கட்ட நடவடிக்கை
குறித்த தகவல்கள் அவர்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படும் என்றும்
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடீர் கூறினார்.

சூடானிலுள்ள மலேசியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேசிய
பாதுகாப்பு மன்றம் உள்பட பல்வேறு அரசு நிறுவனங்களின் துணையுடன்
அந்நாட்டின் நிலவரங்களை விஸ்மா புத்ரா அணுக்கமாக கண்காணித்து
வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது சூடானில் உள்ள 29 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் என்றும்
அவர் சொன்னார்.

சூடானின் நடப்பு நிலவரம் குறித்து அறிந்து கொள்வதற்கும் அங்குள்ள
மலேசியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசு
துறைகளுக்கிடையிலான கூட்டம் இன்று காலை நடத்தப்பட்டது என்றும்
அவர் தெரிவித்தார்.

அந்நாட்டின் நிலவரங்களை அறிந்து கொள்வதற்காக 24 மணி நேர
நடவடிக்கை அறையை விஸ்மா புத்ரா திறந்துள்ளதோடு வாட்ஸ்ஆப்
புலன தொடர்புக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

சூடானின் இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைக்கும் இடையே
ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நாட்டின் பாதுகாப்புக்குப் பெரும்
அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.


Pengarang :