NATIONAL

அமைச்சர் சிவக்குமார் விடுமுறையில் செல்ல வேண்டியதில்லை- பிரதமர் கூறுகிறார்

கோலாலம்பூர், ஏப் 17- ஊழல் புகார் தொடர்பில் விசாரணைக்கு
அழைக்கப்பட்டுள்ள மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் விடுமுறையில்
செல்ல வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் கூறினார்.

ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் அளிக்க சிவக்குமார்
இப்போதுதான் அழைக்கப்பட்டிருக்கிறார். அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை
எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று அவர் சொன்னார்.

விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. அவர் மீது குற்றச்சாட்டு
சுமத்தப்பட்டால் அது வேறு விஷயம். ஆனால், நான் முன்கூட்டியே
ஆருடம் கூற முடியாது என்றார் அவர்.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நடத்தப்படும் விசாரணையில்
சம்பந்தப்பட்ட நபரின் பின்னணி மற்றும் அவர் சார்ந்துள்ள அரசியல் கட்சி
போன்றவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாது எனக் கூறிய அன்வார்,
ஊழலை ஒழிப்பதிலும் உயர்நெறியைக் காப்பதிலும் அரசு நிர்வாகம்
உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்றார்.

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் திட்டத்தில்
நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில் சிவக்குமாரின் வீடு மற்றும்
அலுவலகத்தில் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் சோதனை
நடத்தியதாக ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன. எனினும்,
அச்செய்திக்கு சிவக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அந்நியத் தொழிலாளர்களுக்கான கோட்டாவை அங்கீகரித்ததில்
நிகழ்ந்ததாக கூறப்படும் ஊழல் தொடர்பான விசாரணைக்காக அமைச்சர்
சிவக்குமாரின் தனிச் செயலாளர் உயர் அதிகாரி மற்றும் வேலை வாய்ப்பு
நிறுவனம் முகவர் ஆகியோர் விசாரணைக்காக தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :