NATIONAL

குவா மூசாங்கில் சீரானப் போக்குவரத்தை உறுதி செய்யும் பணியில் 500 போலீஸ்காரர்கள்

கோத்தா பாரு, ஏப் 18- நோன்புப் பெருநாளின் போது வாகனப்
போக்குவரத்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் குவா மூசாங்
பகுதியில் ஓப்ஸ் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்கத்தின் கீழ்
இம்மாதம் 20ஆம் தேதி முதல் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை
போலீசார் பணியில் ஈடுபடுத்தவுள்ளனர்.

இந்த சாலை பாதுகாப்பு இயக்கம் அமலில் இருக்கும் எட்டு தினங்களில்
பணியில் ஈடுபடவிருக்கும் காவல் துறை உறுப்பினர்களில் 254
போக்குவரத்து போலீசாரும் அடங்குர் என்று கிளந்தான் மாநில போலீஸ்
தலைவர் டத்தோ முகமது ஜாக்கி ஹருண் கூறினார்.

சாலைச் சீரமைப்புப் பணிகளுக்காக குவா மூசாங்கில் உள்ள பிரதான
சாலைப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளதால் இம்மாவட்டத்தில்
போக்குவரத்து மீது இம்முறை கூடுதல் கவனம் செலுத்தவிருக்கிறோம்
என அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலால் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக்
கட்டுப்பாட்டு ஆணைக்குப் பிறகு அதிகமானோர் இம்முறை சொந்த
ஊர்களுக்குத் திரும்புவர் என்பதால் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும்
சாத்தியம் உள்ளது எனவும் அவர் சொன்னார்.

இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில் நேற்றிரவு நடைபெற்ற
இஃப்தார் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைக் கூறினார்.

குவா மூசாங் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளை
அடையாளம் காண்பதற்கு ஏதுவாக ஓப்ஸ் லஞ்சார் இயக்கம் இன்று
தொடங்கி இரு தினங்களுக்கு மேற்கொள்ளப்படும் என்றும் அவர்
தெரிவித்தார்.


Pengarang :