NATIONAL

சாலைக் குற்றங்களுக்கு வெ.50 அபராதம்- ஏப்.21 முதல் ஒரு மாதத்திற்குச் சிறப்புச் சலுகை

ஷா ஆலம், ஏப் 18- சாலைப் போக்குவரத்து குற்றங்களுக்கான சிறப்பு
அபராதத் தொகையை அரச மலேசிய போலீஸ் படை வழங்கவுள்ளது.
இந்த சலுகை இம்மாதம் 21 முதல் மே மாதம் 21 வரை அமலில்
இருக்கும்.

ஐம்பது வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த அபராதத் தொகையை
வாகனமோட்டிகள் விரைந்து செலுத்தலாம் எனக்கூறிய பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம், எனினும், இவ்வாண்டில் புரிந்த போக்குவரத்து
குற்றங்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என்றார்.

இந்த அபராதச் சலுகை வழங்கப்பட்ட போதிலும் நாட்டில் குறிப்பாகப்
பெருநாள் காலத்தில் சாலை பாதுகாப்பு உயரிய பட்சத்தில் இருப்பதை
அரச மலேசிய போலீஸ் படை தொடர்ந்து உறுதி செய்து வரும் என்று
அவர் சொன்னார்.

நோன்புப் பெருநாளின் போது சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக
அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சாலைகளை இலக்காகக்
கொண்டு போலீசார் ஓப்ஸ் லஞ்சார் இயக்கத்தை வரும் 18 மற்றும் 19ஆம்
தேதிகளில் நடத்துவர் என்று அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் எழு நாட்களுக்கு
ஓப்ஸ் செலாமாட் இயக்கம் மேற்கொள்ளப்படும் என்றத் தகவலையும்
பிரதமர் வெளியிட்டார்.


Pengarang :