NATIONAL

அபராதம் செலுத்த முடியாத ஏழு போக்குவரத்து குற்றங்கள்- ஜே.பி.ஜே. பட்டியலிட்டது

காஜாங், ஏப் 19- நோன்புப் பெருநாள் சமயத்தில் அபராதம் செலுத்த
முடியாத ஏழு கடும் குற்றங்களைப் புரியும் வாகனமோட்டிகளுக்கு எதிராக
சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) அமலாக்க நடவடிக்கையை
மேற்கொள்ளும்.

வரிசையை முந்திச் செல்வது, இரட்டை கோடுகளில் முந்துவது, சாலை
சமிக்ஞை விளக்கை மீறிவது, அதிக வேகத்தில் வானத்தை செலுத்துவது,
வாகனம் ஒட்டும் போது கைப்பேசியைப் பயன்படுத்துவது, பாதுகாப்பு
வார்ப்பட்டை அல்லது கவசத் தொப்பி அணியாதது, அவசரத் தடத்தைப்
பயன்படுத்துவது ஆகியவையே அந்த ஏழு குற்றங்களாகும் என்று
போக்குவரத்து துணையமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபுல்லா கூறினார்.

நோன்பு பெருநாளுக்கு முன்னர் இரு தினங்கள் அதாவது ஏப்ரல் 20 மற்றும்
21ஆம் தேதியும் நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் இரு தினங்கள்
அதாவது ஏப்ரல் 24 மற்றும் 25ஆம் தேதியும் சரக்கு வாகனங்கள்
சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.

நோன்புப் பெருநாளின் போது தனியார் வாகனங்களோடு சரக்கு
வாகனங்களும் சாலையைப் பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
இன்னும் மோசமாகும் அபாயம் உள்ளதாக அவர் சொன்னார்.

இங்குள்ள தாமான் பிரிமா சவுஜானா ரமலான் உணவு அங்காடி விற்பனை
மையத்தில் நோன்புப் பெருநாள் சாலை பாதுகாப்பு இயக்கத்தைத் தொடக்கி
வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வரை
மேற்கொள்ளப்படும் ஒப்ஸ் செப்பாடு ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு
நடவடிக்கையில் 2,000 உறுப்பினர்களை ஜே.பி.ஜே, பணியில் அமர்த்தும்
என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :