NATIONAL

சிலாங்கூரில் அதிக விபத்து நிகழும் 23 இடங்கள் மீது ஜே.பி.ஜே. தீவிரக் கவனம்

ஷா ஆலம், ஏப் 19- இவ்வாண்டிற்கான நோன்புப் பெருநாள் ஓப்ஸ்
செலாமாட் இயக்கத்தின் போது சிலாங்கூரில் அதிக விபத்துகள் நிகழும் 23
இடங்கள் மீது மாநில சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) தீவிரக்
கவனம் செலுத்தும்.

அதிக விபத்துகள் நிகழும் சாலைகளில் கூட்டரசு நெடுஞ்சாலை,
கோலாலம்பூர்-ஈப்போ சாலை, இலிட் நெடுஞ்சாலை, மத்திய சுற்றுச்சாலை
இரண்டின் 16வது கிலோ மீட்டர் ஆகியவையும் அடங்கும் என்று
சிலாங்கூர் ஜே.பி.ஜே. துணை இயக்குநர் அகமது கமாருன்ஸமான்
மேஹாட் கூறினார்.

இந்த சாலை பாதுகாப்பு அமலாக்க நடவடிக்கை நேற்று தொடங்கி
இம்மாதம் 2ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனக் கூறிய அவர், வேக
வரம்பை மீறுவது, வாகனம் ஓட்டும் போது கைப்பேசியைப்
பயன்படுத்துவது, இரட்டைக் கோடுகளில் முந்திச் செல்வது, அதிக
எடையை ஏற்றுவது உள்ளிட்ட ஒன்பது குற்றங்கள் மீது கவனம்
செலுத்தப்படும் என்றார்.

இக்காலக்கட்டத்தில் சாலைகளை பாதுகாப்பை உறுதி செய்ய 235
உறுப்பினர்களை ஜே.பி.ஜே. பணியில் ஈடுபடுத்தும். என்றும் அவர்
சொன்னார்.

பயணிகள் பாதுகாப்பாக தங்கள் பயணத்தை மேற்கொள்வதை உறுதி
செய்வதற்காக அண்மையில் இரு விரைவு பேருந்து நிறுவன வளாகங்கள்
மீது சோதனை நடத்தினோம் என்று இன்று இங்குள்ள செக்சன் 17 பஸ்
முனையத்தில் சாலை பாதுகாப்பு இயக்கத்தைத் தொடக்கி வைத்தப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.


Pengarang :