NATIONAL

இலங்கைச் சிறார்களை ஐரோப்பாவுக்குக் கடத்தும் உள்நாட்டுக் கும்பல் முறியடிப்பு

கோலாலம்பூர், ஏப் 19- மலேசியத் தம்பதியை இங்கு நேற்று கைது செய்த
தன் மூலம் மலேசிய அனைத்துலக கடப்பிதழைப் பயன்படுத்தி இலங்கைச்
சிறார்களை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் கும்பலின் நடவடிக்கையை
குடிநுழைவுத் துறையினர் முறியடித்தனர்.

பானு இண்டர்நேஷனல் என்ற அக்கும்பல் ஏழ்மை நிலையிலுள்ள
மலேசியர்களின் 12 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்களின் தகவல்களைப்
பயன்படுத்தி அனைத்துலக கடப்பிதழ்களைப் பெறும் நடவடிக்கையில்
ஈடுபட்டு வந்ததாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ
ருஸ்லின் ஜூசோ கூறினார்.

மலேசிய கடப்பிதழைப் பெறுவதற்குப் பிள்ளைகளின் பிறப்பு பத்திரத்தை
குடிநுழைவுத் துறை அலுவலகங்களுக்குக் கொண்டு வரும்படி அக்கும்பல்
வசதி குறைந்த பெற்றோர்களைக் கேட்டுக் கொள்வது வழக்கம் என்று
அவர் சொன்னார்.

குடிநுழைவுத் துறை அலுவலகத்தில் புகைப்படம் எடுப்பது மற்றும்
கைரேகையைப் பதிவு செய்வது போன்ற பணிகளுக்காக சம்பந்தப்பட்ட
சிறார்களின் பெயர் அழைக்கப்படும் போது அவர்களுக்கு பதிலாக அதே
வயதுடைய இலங்கைச் சிறார்கள் முகப்பிடத்தில் நிறுத்தப்படுவர் என்று
அவர் மேலும் தெரிவித்தார்.

கடப்பிதழ் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட மோசடிக் கும்பலைச் சேர்ந்த
அந்த தம்பதியர் அந்த இலங்கைச் சிறார்களை ஐரோப்பிய நாடுகளுக்கு
கொண்டுச் செல்வர் என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
இலங்கைச் சிறார்களுக்கு அனைத்துலக கடப்பிதழ் பெறுவதற்காக தங்கள்
பிள்ளைகளின் பிறப்பு பத்திரத்தை வழங்கிய பெற்றோர்களுக்கு
வெகுமதியாக 500 வெள்ளியை அக்கும்பல் வழங்கும் என்றார் அவர்.

ஒரு இலங்கைச் சிறாருக்கு மலேசியக் கடப்பிதழ்களைப் பெறுவதற்கும்
அவர்களை ஐரோப்பாவுக்கு கொண்டுச் செல்வதற்கும் ஊதியமாக 30,000
முதல் 50,000 யூரோ வரை வழங்கப்பட்டுள்ளது தொடக்கக் கட்ட
விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :