NATIONAL

நோன்புப் பெருநாள்- மூன்று நெடுஞ்சாலைகளில் வாகன எண்ணிக்கை தினசரி 23 லட்சமாக அதிகரிக்கும்

கோலாலம்பூர், ஏப் 19- நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாட்டின் மூன்று
முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகன எண்ணிக்கை தினசரி 23 லட்சமாக
அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம்
(எல்.எல்.எம்.) கூறியது.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை (பிளஸ்), கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை
மற்றும் பந்தாய் தீமோர் 1 நெடுஞ்சாலை ஆகியவற்றில் வரும் மே மாதம்
7ஆம் தேதி வரை இந்நிலை நீடிக்கும் என கணிக்கப்படுவதாக அவ்வாரியம்
அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

வாகன நெரிசலைத் தவிர்க்கவும் சீரான போக்குவரத்தை உறுதி செய்யவும்
பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும்படி சம்பந்தப்பட நெடுஞ்சாலை
ஒப்பந்த நிறுவனங்களை தாங்கள் பணித்துள்ளன என அது தெரிவித்தது.

நேற்று தொடங்கி வரும் மே 7ஆம் தேதி வரை நெடுஞ்சாலைகளில்
நிர்மாணிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை நிறுத்தும்படியும் அனைத்து
நெடுஞ்சாலை நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை
மேலும் குறிப்பிட்டது.

வாகனமோட்டிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு
ஏதுவாக முக்கிய சாலைகளுக்கான பயண அட்டவணையை
வெளியிடுவது, போக்குவரத்து நெரிசல் தொடர்பான தகவல்கள் மற்றும்
டச் அண்ட் கோ மற்றும் இ-வாலட்டில் போதுமான அளவு பணம்
இருப்பதை உறுதி செய்யும் நினைவூட்டல் நெடுஞ்சாலைகளில் உள்ள
மின்னியல் திரைகளில் வெளியிடப்படுவது போன்ற நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்படும்.

இலவச டோல் கட்டண அமலாக்க காலத்தில் டோல் சாவடிகளில் சீரான
போக்குவரத்தை உறுதி செய்ய போதுமான பணியாளர்களை பணியில் அமர்த்தும்படியும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளன.


Pengarang :