NATIONAL

இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சின் முன்னாள் அதிகாரி மீதான ஊழல் வழக்குத் தீர்ப்பு ஒத்தி வைப்பு

கோலாலம்பூர், ஏப் 19- இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை
அமைச்சின் முன்னாள் நிதிச் செயலாளர் ஓத்மான் அர்ஷாட்டிற்கு எதிரான
ஊழல் மற்றும் பண மோசடி வழக்கின் தீர்ப்பை இங்குள்ள செஷன்ஸ்
நீதிமன்றம் வரும் மே 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

வாதத் தொகுப்பைச் சமர்ப்பிக்க தங்களுக்குக் கூடுதல் அவகாசம் தேவை
என தாங்கள் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இவ்வழக்கின் தீர்ப்புக்கான
புதிய தேதியை நீதிமன்றம் நிர்ணயித்ததாக ஓத்மான் சார்பில் ஆஜராகும்
வழக்கறிஞர் முகமது ராபிக் அலி கூறினார்.

இதனைத் தொடர்ந்து 64 வயதுடைய ஓத்மானுக்கு எதிராக வழக்கின்
தீர்ப்பை நீதிமன்றம் வரும் மே 12ஆம் தேதி வழங்கும் என்று நீதிபதி
கமாருடின் கம்சுன் அறிவித்ததாக பெர்னாமா தொடர்பு கொண்ட போது
அவர் தெரிவித்தார்.

மொத்தம் 3 கோடியே 84 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போலி நிதிக்
கோரிக்கையை சமர்ப்பித்ததன் மூலம் தனது அதிகாரத்தை தவறாகப்
பயன்டுத்தியதாக ஓத்மான் மீது கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி
குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த 2012ஆம் ஆண்டு பிப்வரி 28ஆம் தேதிக்கும் 2015ஆம் ஆண்டு
நவம்பர் 18ஆம் தேதிக்கும் இடையே இங்குள்ள புக்கிட் ஜாலில் தேசிய
விளையாட்டுத் தொகுதி அலுவலகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்
குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.


Pengarang :