NATIONAL

33 நெடுஞ்சாலைகளில் இலவச டோல் கட்டணம்-9.3 கோடி வெள்ளி செலவினத்தை அரசு ஏற்றுக் கொள்ளும்

கூச்சிங், ஏப் 19- இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு வாகனமோட்டிகள்
இலவசமாக பயணம் செய்வதற்கு ஏதுவாக அமல்படுத்தப்பட்ட ரஹ்மா
இலவச டோல் கட்டணத் திட்டத்திற்கு உண்டாகும் 9 கோடியே 30 லட்சம்
வெள்ளி செலவினை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும்.

இன்று தொடங்கி வரும் 21ஆம் தேதி வரையிலும் பின்னர் ஏப்ரல் 24ஆம்
தேதியும் நாடு முழுவதும் உள்ள 33 நெடுஞ்சாலைகளில்
அமல்படுத்தப்படும் இலவச டோல் கட்டண திட்டம் வாழ்க்கைச் செலவின
அதிகரிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைக்கும் மடாணி
முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும் என்று முதலாவது துணை
நிதியமைச்சர் டத்தோ அகமது மஸ்லான் கூறினார்.

சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு
தேசிய நிதிச்செலவின அலுவலகம் மதிப்பிட்டுள்ள தொடக்கத் தொகை
இதுவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த டோல் ரஹ்மா திட்டத்தை பெருநாள் வெகுமதித் தொகையாகக்
கருதிக் கொள்ளுங்கள். மக்களின் பணத்தை மக்களிடமே ஒப்படைக்கும்
திட்டத்தின் ஒரு பகுதியாக இது விளங்குகிறது. நோன்புப் பெருநாளின்
போது குடும்பத்தினரைச் சந்திப்பதற்குச் சொந்த ஊர்களுக்குச்
செல்லவதற்குரிய வாய்ப்பினை இந்த திட்டம் வழங்குகிறது என்றார் அவர்.

இன்று இங்கு நடைபெற்ற 2023 நோன்புப் பெருநாள் அன்பளிப்புகளை
வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் சரவா மாநில உள்நாட்டு
வருமானத் துறை இயக்குநர் விஜயன் ஞானலிங்கமும் கலந்து கொண்டார்.


Pengarang :