NATIONAL

மூன்று தன்னார்வலர் படைப் பிரிவினருக்கு நோன்புப் பொருள் சிறப்பு உதவி- பிரதமர் அறிவிப்பு

ஷா ஆலம், ஏப் 20- நோன்புப் பெருநாளை முன்னிட்டு மேலும் மூன்று
தன்னார்வலர் படைப் பிரிவுகளுக்கு சிறப்பு உதவித் தொகையை வழங்க
அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இதன் வழி, பிரதேச இராணுவப்
பட்டாளம், இராணுவ சேமப் படை மற்றும் மலேசியக் கடல்சார்
தன்னார்வலர் காவலர்கள் ஆகிய தரப்பினர் பயன் பெறுவதற்குரிய வாய்ப்பு
கிட்டியுள்ளது.

அந்த மூன்று அமைப்புகளும் சமர்ப்பித்த கோரிக்கையின் அடிப்படையில்
இந்த உதவி வழங்கப்படுவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறினார்.

அந்த தன்னார்வலர் படையினருக்குச் சிறப்பு அலவன்ஸ் வழங்கக் கோரி
விண்ணப்பங்கள் முன்வைக்கப்பட்டன. அவர்கள் அனைவரும்
தன்னார்வலர்களுக்கான உதவித் திட்டத்தில் சேர்க்கப்படுவர் என்று அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள பி.கே.என்.எஸ். காம்ப்ளெக்சில் நடைபெறும் ரமலான்
சந்தைக்கு வருகைப் புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

இதனிடையே, அந்த மூன்று தன்னார்வலர் அமைப்புகளையும் சேர்ந்த 26,000
உறுப்பினர்களுக்கும் நோன்புப் பெருநாள் உதவித் தொகை வழங்க 78
லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியது.


Pengarang :