NATIONAL

டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 2,399 ஆக அதிகரிப்பு

கோலாலம்பூர், ஏப் 20- இம்மாதம் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி
வரையிலான 15வது நோய்த் தொற்று வாரத்தில் நாட்டில் டிங்கி காய்ச்சல்
சம்பவங்களின் எண்ணிக்கை 2.6 விழுக்காடு அதிகரித்து 2,399ஆக
உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 2,339 ஆக
இருந்தது.

இக்காலக்கட்டத்தில் டிங்கி காய்ச்சல் தொடர்புடைய ஒரு மரணச்
சம்பவம் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் பொது மருத்துவப்
பிரிவுக்கான துணைத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர்
நோர்ஹயாத்தி ருஸ்லி அறிக்கை ஒன்றில் கூறினார்.

இவ்வாண்டில் இதுவரைப் பதிவான டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை
33,325 ஆகும் எனக் கூறிய அவர், கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில்
10,954 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்தன என்றார்.

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 204.2 விழுக்காட்டு அதிகரிப்பை இது
பிரதிபலிக்கிறது. கடந்த 2022ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் டிங்கி
காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 16ஆக இருந்த வேளையில்
இவ்வாண்டில் அந்த எண்ணிக்கை 21 ஆக உயர்வு கண்டுள்ளது என்றார்
அவர்.

நோய்ப் பரவல் சாத்தியம் அதிகம் உள்ள 109 இடங்கள் கடந்த வாரம்
அடையாளம் காணப்பட்டன. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த
எண்ணிக்கை 93ஆக மட்டுமே இருந்தது.

சிலாங்கூரில் 59 டிங்கி பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள வேளையில் அதற்கு அடுத்த நிலையில் பினாங்கு (25 இடங்கள்), சபா (10 இடங்கள்), கெடா (4 இடங்கள்),
பேராக் (3 இடங்கள்), சரவா மற்றும் லபுவான் (தலா ஒரு இடம்) ஆகிய
மாநிலங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :