NATIONAL

கோலாலம்பூரில் அதிக விபத்து நிகழும் 50 இடங்களைப் போலீஸ் துறை அடையாளம் கண்டுள்ளது

கோலாலம்பூர், ஏப் 20- கோலாலம்பூரில் நோன்புப் பெருநாளின் போது
அதிக விபத்து நிகழும் சாத்தியம் உள்ள 50 இடங்களை அரச மலேசிய
போலீஸ் படை அடையாளம் கண்டுள்ளது.

ஜாலான் கூச்சிங், ஜாலான் லோக் யூ, ஜாலான் செராஸ் ஆகியவையும்
அந்த பகுதிகளில் அடங்கும் என்று கோலாலம்பூர் சாலை போக்குவரத்து
விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவுத் தலைவர் ஏசிபி சைருடின்
முகமது சாலே கூறினார்.

பெருநாள் காலத்தில் பொது மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதை
உறுதி செய்வதற்காக ஓப்ஸ் லஞ்சார் மற்றும் ஓப்ஸ் செலாமாட்
இயக்கத்தின் போது அப்பகுதியில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவர்
என அவர் சொன்னார்.

நோன்பு மாதத்தின் போது கோலாலம்பூரிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட
ரமலான் சந்தைகளில் போலீசார் நிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தவிர, சாலைகளில் நெரிசலைக் குறைப்பதற்காக பொதுவான
பணிகளில் ஈடுபடும் போலீஸ்காரர்களும் இப்பகுதிகளில் கண்காணிப்பை
மேற்கொண்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள ஜாலான் டூத்தா டோல் சாவடியின் வடக்கு நோக்கிச் செல்லும்
தடத்தில் வாகனமோட்டிகளுக்கு பெருநாள் அன்பளிப்புகளை வழங்கியப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.


Pengarang :