NATIONAL

பல்வேறு குற்றங்களுக்கான ரமலான் சந்தை வியாபாரிகளுக்கு 2,188 குற்றப்பதிவுகள்

புத்ராஜெயா, ஏப் 20- நோன்புப் பெருநாளை முன்னிட்டு கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதி வரை நாடு முழுவதும் 640 ரமலான் சந்தைகளில் உள்ள 51,849 கடைகள் மீது தூய்மை மற்றும் பாதுகாப்பு சோதனை இயக்கத்தை சுகாதார அமைச்சு மேற்கொண்டது.

இச்சோதனையின் போது பல்வேறு குற்றங்களுக்காக அந்த வணிகர்களுக்கு 197,600 வெள்ளி மதிப்புள்ள 2,188 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.

1983 ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் 32 பி பிரிவை மீறியதற்காக கடை உரிமையாளர்கள், பிரநிதிகள் மற்றும் உணவைக் கையாள்வோருக்கு இந்த குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டதாக அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

அந்த வணிகர்கள் புரிந்த குற்றங்களில் உணவைக் கையாள்வது தொடர்பான பயிற்சிகள் கலந்து கொள்ளாதது, டைபாய்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது, உணவைக் கையாள்வதற்கு தேவையான பொருத்தமான உடைகளை அணியாதது ஆகியவையும் அடங்கும்.

இது தவிர 1983ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் 11வது பிரிவின் கீழ் 14 கடைகளை மூடுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று அது குறிப்பிட்டது.

இசை சோதனையின் போது 104,755 உணவக பணியாளர்கள் மீது சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 93 விழுக்காட்டினர் அல்லது 96,911 பேர் டைபாய்டு தடுப்பூசி செலுத்தியிருந்தனர். மேலும் 84 விழுக்காட்டினர் அதாவது 87,832 பேர் உணவை கையாள்வது தொடர்பான பயிற்சி பெற்றிருந்தனர் என அவ்வறிக்கை கூறியது.


Pengarang :