NATIONAL

விரைவுப் பேருந்து மீது கார் மோதியதில் இருவர் பலி

கோலா திரங்கானு, ஏப். 22: நேற்று மதியம் சுங்கை ஈகானில், ஜாலான் கோலா திரங்கானு-கோத்தா பாரு சாலை, கிலோமீட்டர் 21 இல், விரைவுப் பேருந்து மீது கார் மோதியதில், மகள் காயமடைந்த நிலையில், தம்பதிகள் உயிரிழந்தனர்.

மதியம் 12.45 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் பெரோடுவா மைவி கார் ஓட்டுநர் சே கு யூசோஃப் அலி சே கு எம்போங் (52) மற்றும் அவரது மனைவி சித்தி ஃபரிதாப் அஹ்மத் (46) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என கோலா திரங்கானு மாவட்டக் காவல்துறை துணைத் தலைவர் சுப்ரிட்டன் வான் முகமட் ஜாகி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் முன் பயணி இருக்கையில் இருந்த தம்பதினரின் மகள் சே கு பத்ரிஸ்யா (18), 51 வயதான எக்ஸ்பிரஸ் பஸ் டிரைவர் மற்றும் எட்டு பஸ் பயணிகள் காயமடைந்தனர்.

“முதற்கட்ட விசாரணையில், அந்த விரைவு பேருந்து 27 பயணிகளைக் கோத்தா பாரு, கிளந்தனில் இருந்து குவாந்தன், பகாங்கிற்குச் ஏற்றி செல்லும் போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

தம்பதியின் உடல்கள் சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையின் (HSNZ) தடயவியல் மருத்துவத் துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப் பட்டதாகவும் அவர் கூறினார்.

தம்பதியரின் மகளும் விரைவுப் பேருந்து ஓட்டுநரும் சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருப்பதாகவும் காயமடைந்த பேருந்து பயணிகள் மேல் பரிசோதனைக்காக செத்தியு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :