NATIONAL

அடையாள பத்திரப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் அளப்பரிய பங்காற்றும் மை செல்

ஷா ஆலம், ஏப் 25- சிலாங்கூரில் அடையாளம் ஆவணங்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர் நோக்கும் மாநில மக்களுக்கு உதவும் பணியினை  மைசெல் பிரிவு மிகவும் ஆக்ககரமான முறையில் மேற்கொண்டு வருகிறது.

மக்களிடையே குறிப்பாக இந்திய சமூகத்தில் அதிகம் காணப்படும் அடையாளப் பத்திரங்கள் இல்லாதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இந்த மைசெல் கடந்த 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டதாக அதன் நிர்வாகிகளில் ஒருவரான திருமதி வி.சாந்தா கூறினார்.

மைகாட் எனப்படும் அடையாளக் கார்டு இல்லாமை, பிறப்புப் பத்திர மற்றும் குடியுரிமைச் சிக்கல், குழந்தை தத்தெடுப்பு, சிவப்பு அடையாளக் கார்டு பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களுக்கு தீர்வு காண்பதை இந்த மைசெல் அமைப்பு பிரதான நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

முறையான ஆவணங்கள் இல்லாமை, காலம் தாழ்த்தி அடையாளப் பத்திரங்களுக்கு விண்ணப்பம் செய்வது போன்ற காரணங்களால் உரிய அடையாள  பத்திரங்களைப் பெற்றுத் தருவதில் தாங்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக அவர் சொன்னார்.

மாநிலம் முழுவதும் மைசெல் மூலம் நடத்தப்படும் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளின் வாயிலாக முறையான அடையாள ஆவணங்கள் இல்லாதவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அந்த ஆவணங்களைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

சம்பந்தப்பட்டவர்கள் செய்யும் விண்ணப்பத்தின் அடிப்படையில் உரிய ஆவணங்களைத் தயார் செய்து தேசிய பதிவுத் துறை அலுவலகங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று முறையாக விண்ணப்பம் செய்கிறோம் என்றார் அவர்.

விண்ணப்பம் செய்வோர் பொறுமையுடன் காத்திருந்து அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை முறையாக வழங்கி மலாய் மொழி பேட்டியிலும் தேறினால் சில ஆண்டுகளில் அவர்களுக்கு அடையாளப் பத்திரங்கள் கிடைப்பதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடையாள ஆவணங்களைப் பெறுவதற்கு முகவர்களை நாடுவதை தவிர்க்கும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

அடையாளப் பத்திரங்கள் இல்லாதோர் அதற்கான விண்ணப்பத்தை செய்வதற்கு சிலாங்கூர் மாநில அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவின் அலுவலகத்தில் செயல்படும் மைசெல் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :