SELANGOR

கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் கார் நிறுத்த அபராதம் 15.00 வெள்ளியாகக் குறைப்பு

ஷா ஆலம், ஏப் 27- வாகன நிறுத்துமிடக் குற்றங்களுக்கான அபாரதத்
தொகையை குறைந்த பட்சம் 15.00 வெள்ளியாகக் கிள்ளான் நகராண்மைக்
கழகம் நிர்ணயித்துள்ளது. இந்த சலுகை வரும் மே மாதம் 1 தேதி
தொடங்கி ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும்.

நீதிமன்ற நடவடிக்கை உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு
முன்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கும் நோக்கில்
இந்த சலுகை அறிவிக்கப்படுவதாக நகராண்மைக் கழகத்தின் தொடர்பு,
வர்த்தகப் பரிவு இயக்குநர் நோர்பிஷா மாபிஷ் கூறினார்.

எனினும், குற்றத் தன்மையைப் பொறுத்து அபராதத் தொகையும் அமையும்
என்று அவர் தெளிவுபடுத்தினார். பிரத்தியேக இடங்கள் மற்றும் மாற்றுத்
திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவது
மற்றும் இதர வாகனங்களுக்கு இடையூறை ஏற்படுத்துவது போன்றக்
குற்றங்களுக்கு அபராதக் கழிவு வழங்கப்படாது என்றும் அவர்
தெளிவுபடுத்தினார்.

வாகனமோட்டிகள் தங்களுக்குக் குற்றப்பதிவு உள்ளதா என்பதை
ipay.mpklang.gov.my/home/kompaun என்ற அகப்பக்கம் வாயிலாகவும் “Smart Parking
MPKlang“ என்ற செயலி வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.

அபராதங்களை ஜோம்பேய் மற்றும் கிள்ளான் நகராண்மைக் கழக
தலைமையகத்தில் உள்ள ஐ-கியோஸ் முகப்பிடத்திலும் நகராண்மை
கழகத்தின் கிளை அலுவலகங்கள் மற்றும் ஜி.எம். கிள்ளான்
பேராங்காடியின் வரவேற்பு கூடத்திலும் செலுத்தலாம்.


Pengarang :