NATIONAL

கோவிட்-19 பரவலைத் தடுக்க மாணவர்களுக்கு மீண்டும் முகக்கவரி- சிலாங்கூர் அரசு வரவேற்பு

ஷா ஆலம், ஏப் 27- கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பைக் கருத்தில்
கொண்டு பள்ளிகளில் முகக்கவரி அணிவதை மீண்டும் கட்டாயமாக்கும்
கல்வியமைச்சின் பரிந்துரையை சிலாங்கூர் மாநில அரசு வரவேற்றுள்ளது.

மாணவர்கள் மத்தியில் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கும் புதிய
வகை தொற்றுகளிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்கும்
இந்நடவடிக்கை பெரிதும் துணை புரியும் என்று பொது சுகாதாரத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட்
கூறினார்.

பள்ளிகளில் நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளதை தரவுகள்
காட்டுகின்றன. எனினும், இது கவலையளிக்கும் வகையில் இல்லை.
பெருநாள் காலங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த காரணத்தால்
இவ்விஷயத்தை நாம் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என அவர்
குறிப்பிட்டார்.

யாருக்கு நோய்த் தொற்று உள்ளது என்பது நமக்குத் தெரியாது. இதனால்
சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும். ஆகவே, மாணவர்கள் முகக்கவரி
அணிவது நல்லது. ஏற்கனவே இந்த நடைமுறை அமலில் இருந்ததால்
மாணவர்களுக்கு இதனால் பிரச்சனை ஏதும் இருக்காது என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் ஆர்க்டுருஸ் எனும் புதிய வகை
திரிவு பரவல் காரணமாக பள்ளி மாணவர்களிடையே மீண்டும்
முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதற்கு சுகாதார அமைச்சு
பரிந்துரைத்துள்ளது தொடர்பில் சித்தி மரியா இவ்வாறு கருத்துரைத்தார்.


Pengarang :