NATIONAL

புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை தொழிற்சாலை அருகே கண்டெடுக்கப்பட்டது

குவாந்தான், ஏப்ரல் 30: நேற்று கம்போங் பெரமுவில் உள்ள ஒரு தொழிற்சாலையின் வேலிக்கு அருகில் புதிதாகப் பிறந்ததாக நம்பப்படும் ஆண் குழந்தை ஒன்று பூச்சி கடித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

குவாந்தான் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி வான் புசு கூறுகையில், நேற்று மதியம் 12.10 மணியளவில் பொதுமக்கள் குழந்தை கண்டெடுக்கப் பட்டதன் தொடர்பாக அவரது தரப்புக்கு அழைப்பு வந்தது.

51 வயதுடைய பெண்மணி ஒருவரால் அக்குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“அந்தப் பெண் தொழிற்சாலை வேலியின் விளிம்பிற்கு அருகில் உள்ள வீட்டிலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் அந்த ஆண் குழந்தையைக் கண்டுபிடித்துள்ளார்,“ என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

குழந்தையைச் சிகிச்சைக்காகத் தெங்கு அம்புவான் அஃப்சான் (HTAA) மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு முன், மேல் நடவடிக்கைக்காக காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு அந்தப் பெண் தனக்குத் தெரிந்தவர்களிடம் உதவி கேட்டதாக வான் கூறினார்.

” அக்குழந்தையின் நிலை இப்போது சீராக உள்ளது. இன்னும் குழந்தைகள் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், சந்தேக நபர் தனது குழந்தையை வேறு இடத்தில் பெற்றெடுத்திருக்கலாம் என்றும் நேற்று அதிகாலை அக்குழந்தையைச் சம்பவ இடத்திலேயே தூக்கி எறிந்துவிட்டு பிரசவத்தை மறைக்கச் செயல் பட்டிருக்கலாம் என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

குற்றவியல் சட்டத்தின் 317வது பிரிவின் கீழ் இன்னும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :