NATIONAL

பெண் காவல்துறை அதிகாரியின் மேல் காரை மோதிய நபர் கைது

சுகாய், ஏப்ரல் 30: கெமாமன் மாவட்டக் காவல்துறை தலைமையகத்திற்கு (IPD) வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பெண் காவல்துறை அதிகாரியின் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

கெமாமான் மாவட்டக் காவல்துறைத் தலைவர், சுப்ரிட்டன் ஹன்யான் ரம்லான், முதற்கட்ட விசாரணையில், சம்பவம் நிகழ்வதற்கு முன், ஜாலான் டத்தோவில் காலை 11.30 மணியளவில் 51 வயதான அக்கார் ஓட்டுனர் தனது மாமியாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், சொத்து பிரச்சனை இந்த தகராறுக்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

வாக்குவாதத்தின் போது, சந்தேக நபர் ஒரு குச்சியை எடுத்து தனது மாமியாரின் காரின் முன்பக்கப் பானட் மற்றும் காரின் கூரையில் பள்ளம் ஏற்படும் வரை தட்டியதாகக் கூறப்படுகிறது.

“அந்நபரின் மாமியார் பயந்துபோய் காரில் ஏறி உதவி பெற சுகாய் காவல் நிலையத்திற்குச் சென்றார்.

சந்தேக நபர் தனது மாமியாரைப் பின்தொடர்ந்து ஆபத்தான முறையில் முந்திச் செல்ல முயன்றார். அச்சமயம் எதிர் திசையில் இருந்து வந்த பெண் காவல்துறை அதிகாரியின் மோட்டார் சைக்கிள் மீது மோதினார்,” என்று ஓர் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

36 வயதான சார்ஜென்ட் தரவரிசையில் உள்ள அக்காவல் துறை அதிகாரி மேல் சிகிச்சைக்காகக் கெமாமன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஹன்யான் கூறினார்.

 சம்பவம் நடந்த உடனே சந்தேக நபர் தப்பி ஓட முயன்றார். ஆனால் சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இபோக் சாலை ஓரத்தில் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டார்.

“சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 42(1)ன் கீழ் கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டுதல், குற்றவியல் சட்டம் பிரிவு 427 மற்றும் குற்றவியல் சட்டம் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்றார்.

– பெர்னாமா


Pengarang :