SELANGOR

ஜெராம் தொகுதி இந்திய சமூகத் தலைவரின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்

ஜெராம், மே 3- ஜெராம் சட்டமன்றத் தொகுதியின் இந்திய சமூகத்
தலைவர் கே.மணிவர்மன் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் டேசா
கோல்பீல்ட்ஸ் எம்.பி.கே.எஸ். மண்டபத்தில் கடந்த ஞாயிறு அன்று சிறப்பாக
நடைபெற்றது.

பெர்மாத்தாங் தொகுதி இந்திய சமூகத் தலைவர் கே.பத்மநாபன்
ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாம் நிகழ்வுக்கு கோல
சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி
அகமது தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜூல்கிப்ளி உடலாரோக்கியத்திற்கு
முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த
ஏற்பாட்டுக் குழுவினருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டதோடு
இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தும்படியும் ஆலோசனை
கூறினார்.

இந்த நிகழ்வில் நீரிழிவு, இரத்தம் அழுத்தம், கொலஸ்ட்ரோல் உள்ளிட்ட
சோதனைகளை கோல சிலாங்கூர் போலிகிளினிக்கைச் சேர்ந்த டாக்டர்
பெட்ரிஷியா பேவல் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்டது.
மேலும் இந்த நிகழ்வில் மாநில மற்றும் மத்திய அரசுகளின் மக்கள் நலத்
திட்டங்கள் தொடர்பான விளக்கமளிப்பும் பதிவும் நடைபெற்றது.

இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி 65 பேர் பெக்கா எனும் மத்திய அரசின்
உதவித் திட்டங்களிலும் 10 பேர் சொக்சோ திட்டத்திலும் பதிவு செய்தனர்.
மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த திட்டத்தில்
மொத்தம் 173 பேர் பங்கு கொண்ட பயன்பெற்றனர்.


Pengarang :