SELANGOR

கிள்ளானில் மாபெரும் வேலை வாய்ப்புச் சந்தை- வார இறுதியில் நடைபெறும்

ஷா ஆலம், மே 3- இவ்வார இறுதியில் நடைபெறவிருக்கும் “கார்னிவெல்
கெர்ஜாயா சிலாங்கூர் 2023“ வேலை வாய்ப்புச் சந்தையில் பல்வேறு
துறைகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள்
வழங்கப்படுகின்றன.

கிள்ளான், டேவான் ஹம்சாவில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00
மணி வரை நடைபெறும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் முப்பதுக்கும்
மேற்பட்ட முதலாளிகள் பங்கேற்பதாகச் சமூகவியல் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் உற்பத்தி, சேவை, வங்கி, உணவு
விநியோகம் மற்றும் உபசரணை உள்ளிட்ட துறைகளில் வேலை
வாய்ப்பினைப் பெறுவதற்குரிய வாய்ப்பு பொது மக்களுக்கு வழங்கப்படும்
என அவர் சொன்னார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் நேர்முகப் பேட்டிகள்
நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதால் இதில் கலந்து கொள்வோர்
தங்களின் சுய தகுதிக் குறிப்புகளை உடன் கொண்டு வரும்படி அவர்
கேட்டுக் கொண்டார்.

மனிதவள அமைச்சு, சிலாங்கூர் தொழிலாளர் திறன் மேம்பாட்டுப் பிரிவு
(யு.பி.பி.எஸ்.) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்த நிகழ்வில்
ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வர் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர்
குறிப்பிட்டார்.

வேலை தேடிக் கொண்டிருப்போர் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இந்த
நிகழ்வில் தவறாது கலந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கு கொள்ள விரும்புவோர்
https://myfuturejobs.gov.my/careerfair/ எனும் அகப்பக்கம் வாயிலாக பதிவு
செய்யலாம்.


Pengarang :