NATIONAL

அமெரிக்க வாழ் மலேசியர்களுடன் மந்திரி புசார் சந்திப்பு- மாநில மேம்பாட்டிற்கான கருத்துகளைக் கேட்டறிந்தார்

ஷா ஆலம், மே 9- அமெரிக்காவின் சன் பிரான்சிஸ்கோ பயணம்
மேற்கொண்டுள்ள சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
அங்கு தங்கியிருக்கும் மலேசியர்கள் மற்றும் உயர் கல்வி மேற்கொண்டு
வரும் மாணவர்களைச் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது அவர், நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியப்
பங்காற்றி வரும் சிலாங்கூர் மாநிலத்தை மேலும் மேம்படுத்துவதற்கான
ஆலோசனைகளையும் அவர்களிடம் கேட்டறிந்தார்.

மாநில மக்களின் குறிப்பாக வசதி குறைந்தவர்களுக்கு உதவும்
திட்டங்களுக்கு மாநில அளித்து வரும் முக்கியத்துவத்தை தாம்
அச்சந்திப்பின் போது எடுத்துரைத்ததாக அவர் தனது பேஸ்புக் பதிவில்
கூறினார்.

இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பில் இடம் பெற்றுள்ள 46
திட்டங்கள் வாயிலாக மாநில அரச மக்களின் வாழ்க்கைத் தரத்தை
மேம்படுத்துவதற்கு பாடுபடுவதோடு இந்த டாருள் ஏசான் பூமியில் யாரும்
விடுபடாமலிருப்பதையும் உறுதி செய்து வருகிறது என அவர்
குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வுக்கு வருகை புரிந்த புலம் பெயர்ந்த மலேசியர்களுக்கு நான்
நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு
அறுசுவை உணவு வழங்கிய கோரியண்டர் உணவகத்திற்கும் எனது
நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன் என்றார் அவர்.

இந்த சந்திப்புக்கு ஒரு நாள் முன்னதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள
சிலாங்கூர் மாநில மாணவர்களுடன் சந்திப்பு நடத்திய அமிருடின் மாநில
அரசு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை அவர்களிடம்
கேட்டறிந்தார்.

வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள் கல்வியை முடித்தவுடன் தாயகம்
திரும்பி சேவையாற்றுவதற்கு ஏதுவாக வெளிநாடுகளில் பயிலும்
சிலாங்கூர் மாநில மாணவர்களுக்காகச் சிறப்புத் திட்டம் ஒன்றை மாநில
அரசு விரைவில் அமல்படுத்தவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :