NATIONAL

கைவிடப்பட்ட வாகனங்களைக் கையாள்வதற்கு ஓரிட மையம்- எம்.பி.ஏ.ஜே. திட்டம்

அம்பாங் ஜெயா, மே 9- கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றும்
நடவடிக்கைக்காக ஓரிடம் மையத்தை அமைப்பதற்கான சாத்தியத்தை
அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் ஆராய்ந்து வருகிறது.

இவ்விவகாரத்தில் சட்ட அம்சங்களும் உள்ளடங்கியுள்ளதால் இதன்
அமலாக்கத்தில் புதிய ஆலோசனைகளையும் ஆய்வுக் எடுத்துக் கொள்ள
வேண்டியுள்ளது என்று நகராண்மைக் கழகத் தலைவர் டாக்டர் அனி
அகமது கூறினார்.

இதற்கு முன்னர், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மட்டுமே
அகற்றும் பணியில் நகராண்மைக் கழகம் ஈடுபட்டு வந்தது. தங்களிடம்
உள்ள கைவிடப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கான வழி
தெரியாத நிலையிலிருக்கும் பொது மக்களுக்கு சேவைகளை
வழங்குவதற்கான வழிகளை தற்போது ஆராய்ந்து வருகிறோம் என அவர்
சொன்னார்.

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் பொது மக்கள் தங்களிடமுள்ள
பயன்படுத்தாத வாகனங்களை செலவின்றி அப்புறப்படுத்துவதற்கான
வாய்ப்பு கிட்டும். அதே சமயம் நகராண்மைக் கழகத்திற்கு வருமானம்
ஈட்டித் தரக்கூடிய மற்றொரு வழியாகவும் இது விளங்கும் என்றார் அவர்.

இதனிடையே, இ-வேஸ்ட் எனப்படும் மின்சார மற்றும் மின்னியல் கழிவு
சேகரிப்பு சேவையை வர்த்தகமயமாக்குவதற்கான சாத்தியத்தையும்
நகராண்மைக் கழகம் ஆராய்ந்து வருகிறது என்று அனி குறிப்பிட்டார்.

மதிப்பீட்டு வரி வசூலிப்புடன் வருமானத்திற்கான இதர வழிகளையும்
பல்வகைப்படுத்துவதில் நகராண்மைக் கழகம் கவனம் செலுத்தி
வருவதாகவும் அவர் சொன்னார்.

அம்பாங் ஜெயா வட்டாரத்தில் குடியிருப்பு பகுதிகள் 19.11 விழுக்காடாகவும்
வர்த்தக மற்றும் தொழிலியல் பகுதிகள் 3.08 விழுக்காடாகவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி 53.06 விழுக்காடாகவும் உள்ளதை கருத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது என்றார் அவர்.


Pengarang :