NATIONAL

பயிற்சி இராணுவ வீரர்கள் பகடிவதை- 10 பேரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு

குவாந்தான், மே 9- குவாந்தான் ஆகாயப் படைத் தளத்தில் அரச மலேசிய
ஆகாயப்படையின் பயிற்சி இராணுவ வீரர்கள் பகடிவதை செய்யப்பட்ட
சம்பவம் தொடர்பில் பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார்
வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவர்களில் பகடிவதைக்கு ஆளானதாகக்
கூறப்படும் ஐந்து பயிற்சி இராணுவ வீரர்களும் அவர்களைத்
துன்புறுத்தியதாக கூறப்படும் ஆறு வீரர்களும் அடங்குவர் என்று பகாங்
மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் புகார் கிடைத்தவுடன் அந்த இராணுவ வீரர்கள்
விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். இதன் தொடர்பில் இதுவரை யாரும்
கைது செய்யப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரச மலேசிய ஆகாயப்படை உள்பட அனைத்துத் தரப்பினரும்
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர் என்றார் அவர்.
விசாரணை அறிக்கை சட்டத்துறை துணைத் தலைவரிடம் சமர்ப்பிப்பதற்கு
முன்னர் பயிற்சி மேலாளர் உள்பட பலரிடம் விசாரணை மேற்கொண்டு
விசாரணையை முழுமைப்படுத்த விரும்புகிறோம் என அவர் மேலும்
சொன்னார்.

பகாங் மாநில போலீஸ் தலைவர் மாற்றம் தொடர்பில் இங்குள்ள மாநில
போலீஸ் தலைமையத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு அணிவகுப்பு
நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பகாங் மாநிலப் போலீஸ் தலைவராக
பதவி வகித்து வரும் டத்தோஸ்ரீ ரம்லி, இம்மாதம் தொடங்கி புக்கிட்
அமான் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநராகப் பதவியேற்கிறார்.
ரம்லிக்கு பதிலாகப் பகாங் மாநில போலீஸ் தலைவர் பதவியை

கோலாலம்பூர் துணைப் போலீஸ் தலைவர் டத்தோ யாஹ்யா ஓத்மான்
ஏற்கவிருக்கிறார்.


Pengarang :