NATIONAL

வெட்டுமரம் விழுந்து லோரி ஓட்டுநர் பரிதாப மரணம்- கிளந்தானில் சம்பவம்

குவா மூசாங், மே 9- லோரியிலிருந்த வெட்டு மரம் சரிந்து விழுந்த
சம்பவத்தில் அதன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச்
சம்பவம் குவா மூசாங்கிலுள்ள பலகைத் தொழிற்சாலை ஒன்றில் நேற்று
பிற்பகல் 2.15 மணியளவில் நிகழ்ந்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்னரே வேலையில் சேர்ந்த நோரஸ்லான்
ஹம்டான் (வயது 53) என்ற அந்த ஓட்டுநர் லோரியின் நடுவிலுள்ள
சங்கிலி தவிர்த்து இதரச் சங்கிலிகளை அகற்றும் வழக்கமான பாணியைப்
பின்பற்றி வெட்டுமரங்களை இறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது
இந்த விபத்து நிகழ்ந்தது என்ற குவா மூசாங் மாவட்டப் போலீஸ் தலைவர்
சிக் சூன் ஃபூ கூறினார்.

இந்த சங்கிலியின் இணைப்பை அகற்றும் பணியின் போது லோரியின்
இடது புறம் சென்று சங்கிலியை இழுக்க நோராஸ்லான் முற்பட்ட போது
வெட்டுமரம் ஒன்று சரிந்து அவர் மீது விழுந்ததாக சிக் சூன் தெரிவித்தார்.
உடனடியாக குவா மூசாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த
ஓட்டுநர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்ததாக இன்று வெளியிட்ட
அறிக்கை ஒன்றில் கூறினார்.

இந்த சம்பவத்தில் குற்றத்தன்மை இருப்பதாக தாங்கள் சந்தேகிக்கவில்லை
என்பதோடு திடீர் மரணமாக இச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று
அவர் மேலும் குறிப்பிட்டார்.

உடலில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக இரத்தம் அதிகம்
வெளியேறி அவ்வாடவர் உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் அவர்.


Pengarang :