SELANGOR

புக்கிட் காசிங் புதிய வடிகால் முறை ஜூன் மாதம் தயாராகும்- ராஜீவ் தகவல்

ஷா ஆலம், மே 9- புக்கிட் காசிங்கில் நிலவும் திடீர் வெள்ளப்
பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் ஜாலான் 18/17 சாலையில் புதிய
வடிகால் முறையை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் அமைக்கும்.

மழை காலத்தில் தேங்கும் நீர் விரைவாக கால்வாய்களில் சேர்வதை இந்த
திட்டம் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகப் புக்கிட் காசிங்
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ் கூறினார்.

தற்போதுள்ள கால்வாய் முறையாகப் பராமரிக்கப்படாதக் காரணத்தால்
அப்பகுதியில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதாக கூறிய அவர்,
சுற்றுவட்டாரத்தில் சேரும் நீரை வெளியேற்றும் ஒரு நீர்வழித் தடமாக
அந்த கால்வாய் விளங்குகிறது என்றார்.

காலப்போக்கில் மண் சரிந்து அந்த கால்வாய் குறுகலாக ஆகி விட்டதால்
மழையின் போது அப்பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது என்று அவர்
சொன்னார்.

சுமார் 130 மீட்டர் நீளம் கொண்ட இந்த வடிகாலை அமைப்பதன் மூலம்
அருகிலுள்ள பிரதான கால்வாயில் நீர் விரைவாகக் கலப்பதை உறுதி செய்ய
முடியும் என்றார் அவர்.

இந்த வெள்ளப் பிரச்சனை தொடர்பில் வட்டார மக்கள் தம்மிடமும்
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்திடமும் தொடர்ந்து புகார் அளித்து
வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதான கால்வாய் குப்பைகளால் அடைபடாமல் இருப்பதை உறுதி செய்து
வரும் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திற்குத் தாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ராஜீவ் தெரிவித்தார்.


Pengarang :