SELANGOR

நோன்புப் பெருநாள் சமயத்தில் சராசரி 7,400 டன் குப்பைகள் தினசரிஅகற்றப்பட்டன

ஷா ஆலம், மே 12- பெருநாள் காலத்தில் வீடுகளில் சேரும் குப்பைகள்
குறிப்பாக உணவுக் கழிவுகளின் அளவு ஆறு விழுக்காடு வரை
அதிகரித்தாக மாநிலத்தில் குப்பைகளை அகற்றும் பணிக்குப்
பொறுப்பேற்றுள்ள கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட்
நிறுவனம் கூறியது.

நோன்பு மாதம் தொடங்கி நோன்புப் பெருநாள் வரையிலான
காலக்கட்டத்தில் அதாவது மார்ச் 23 முதல் நேற்று வரை இந்த அளவு
பதிவு செய்யப்பட்டதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ
ரம்லி தாஹிர் கூறினார்.

ரமலான் சந்தை மற்றும் பெருநாள் கால திறந்த இல்ல உபசரிப்புகள்
காரணமாக குப்பைகளின் அளவு அதிகரிப்பைக் கண்டதாக அவர்
சொன்னார்.

மாநிலத்தில் வழக்கமாக தினசரி 7,000 டன் வரையிலான குப்பைகள்
அகற்றப்படும். ரமலான் மற்றும் ஷவால் மாதங்களில் இந்த எண்ணிக்கை
6 விழுக்காடு அதிகரித்து 7,400 டன்களாக உயர்வு கண்டது என்று அவர்
தெரிவித்தார்.

நோன்புப் பெருநாளின் முதல் இரு தினங்களில் சேகரிக்கப்பட்ட
குப்பைகளின் அளவு கடந்தாண்டை விட குறைவாகக் காணப்பட்டது.
கூடுதல் விடுமுறையைப் பயன்படுத்தி பொது மக்கள் முன்கூட்டியே
சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டதால் அக்காலக்கட்டத்தில் குறைவான
குப்பைகளே சேகரிக்கப்பட்டன என்றார் அவர்.


Pengarang :