NATIONAL

நிலையான அரசு நிர்வாகத்தின் வழி வட்டார நாடுகளை விட சிறப்பான பொருளாதார அடைவு நிலை பதிவு

கோம்பாக், மே 15- ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மைமிக்க
நிர்வாகம் காரணமாக இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் நாட்டின்
பொருளாதாரம் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்தது.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில்
நாட்டின் பொருளாதாரம் 5.6 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாகப் பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்த வளர்ச்சி மற்ற வட்டார நாடுகளைவிட அதிகமானதாகும். வரும்
ஆறு மாத காலத்தில் நிலைமை எப்படி இருக்கும் என யூகித்துப்
பாருங்கள். முதல் காலாண்டில் நாம் கணித்ததை விட அதிகமாக அதாவது
5.6 விழுக்காட்டு வளர்ச்சியை பதிவு செய்துள்ளோம். சீனா, வியட்னாம்
மற்றும் இந்தோனேசியாவை விட இந்த வளர்ச்சி அதிகமானதாகும் என
அவர் தெரிவித்தார்.

நமது நிர்வாக முறை சரியான தடத்தில் செல்வதை இது புலப்படுத்துகிறது
என்று ஜெலாஜா கித்தா சிலாங்கூர் அய்டில் பித்ரியை முன்னிட்டு
நேற்றிரவு இங்கு நடத்தப்பட்ட மலேசியா மடாணி நோன்புப் பெருநாள்
பொது உபசரிப்பில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

அனைத்து துறைகளிலும் இலக்கைத் தாண்டிய வளர்ச்சி காரணமாக
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக முன்னதாக
அன்வார் கூறியிருந்தார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள 19 கூட்டுக் கட்சிகளின்
ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் விதமாக மாநிலத் தேர்தலில்
சிலாங்கூரின் வெற்றி அமையும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இம்முறை நாம் கோம்பாக் முழுவதையும் ஊடுருவ முடியும் என நான்
நம்புகிறேன். துரோகம் செய்தவர்களுக்கு ஒருபோதும் முகம்
கொடுக்காதீர்கள் என்றார் அவர்.


Pengarang :