NATIONAL

ஒற்றுமை அரசின் ஆறு மாத ஆட்சியில் முறைகேடு தொடர்பில் எந்த புகாரும் இல்லை- பிரதமர் பெருமிதம்

கோலாலம்பூர், மே 15- ஒற்றுமை அரசாங்கத்தின் இந்த ஆறு மாத கால
ஆட்சியின் போது அமைச்சரவை உறுப்பினர்களை சம்பந்தப்படுத்திய எந்த
முறைகேடும் புகார் செய்யப்படவில்லை.

நாடு இழப்பை எதிர்நோக்குவதையும் ஏளனத்திற்கு ஆளாவதையும்
தவிர்ப்பதில் அமைச்சர்கள் வழங்கிய சிறப்பான பங்களிப்பை இந்த வெற்றி
புலப்படுத்துகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் மகத்தான சாதனை என்னவென்று யாராவது
கேட்டால், பண்புக் கூறுகளைச் சிதைக்கும் செயல்களை தடுப்பதில்
அமைச்சரவை உறுப்பினர்கள் காட்டிய உறுதியை சாதனை என்று
கூறுவேன்.

தங்கள் சுயலாபத்திற்காக புரியப்பட்ட பொருள் சேர்ப்பது மற்றும் அதிகாரத்
துஷ்பிரயோகம் செய்வது போன்ற செயல்கள் காரணமாக மதிப்புக் கூறுகள
சிதைந்து நாடு பெரும் இழப்பை எதிர்நோக்கியதோடு பிற நாடுகள்
மத்தியில் ஏளனத்திற்கும் ஆளானது என்றார் அவர்.

மேல் மட்டத் தரப்பினர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களின் சாதனை
என்று இதனைக் கூறுவேன். இது ஒன்றும் சாதாரண விஷயமல்ல என்று
இங்குள்ள உலக வாணிக மையத்தில் நடைபெற்ற ஒற்றுமை
அரசாங்கத்தின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய போது அவர்
தெரிவித்தார்.

மலேசியாவுக்குப் புது வடிவம் கொடுப்பதை நோக்கமாக கொண்டு
நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் ஒற்றுமை அரசாங்கத்தின் 19 உறுப்புக்
கட்சிகளை உள்ளடக்கிய சுமார் 10,000 பேராளர்கள் கலந்து கொண்டனர்.


Pengarang :