NATIONAL

அதிக வெப்பமான சீதோஷணத்தால் தோல் புற்றுநோய் மற்றும் சரும செல் டிஎன்ஏ பாதிப்பு ஏற்படும் அபாயம்

ஷா ஆலம், மே 15: அதிக  வெப்பமான சீதோஷண நிலையால்  வெப்ப பக்கவாதம் ஏற்படுவது மட்டுமின்றி, தோல் புற்றுநோய் மற்றும் சரும செல் டிஎன்ஏ பாதிப்பின் அபாயத்தையும் அதிகரிக்கும் எனப் பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, நண்பகலில் சுட்டெரிக்கும் சூரிய ஒளியில்  வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுப் படுவதை  குறைக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தினார் டாக்டர் முகமட் ஹபீஸ் ஜாஃபர்.

“சூரிய ஒளியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள குறிப்பாக நண்பகல் நேரங்களில் குடைகள், தொப்பிகள், சன்கிளாஸ்கள் போன்ற பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

“மிக முக்கியமாக, வெளி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது UV பாதுகாப்பு லோஷனைப் பயன்படுத்துவதற்கும்,”  அவர்  ஆலோசனை கூறினார். மேலும், உஷ்ணமான வானிலை சோர்வை ஏற்படுத்துகிறது எனக் குறிப்பிட்டார்.

வெப்பத்தைத் தாங்க வசதியான, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும், இருண்ட நிறங்களைத் தவிர்க்கவும் அவர் மக்களை ஊக்குவித்தார்.

நீர் இழப்பு  ஏற்படுவதைத் தடுக்க சர்க்கரை பானங்கள் அல்லது காஃபினைத் தவிர்ப்பதுடன் தொடர்ந்து தண்ணீர் குடிக்குமாறு டாக்டர் முகமட் ஹபீஸ் பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆகஸ்ட் வரை வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பதன் விளைவாகச் சுகாதார சம்பந்தப்பட்ட சம்பவ எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் துணை சுகாதார அமைச்சர் லுகானிஸ்மன் அவாங் சுவானி தெரிவித்தார்.


Pengarang :