ANTARABANGSA

உலகம் முழுவதும் மரண தண்டனை எண்ணிக்கை கடந்தாண்டு 53 விழுக்காடு அதிகரிப்பு

பெர்லின், மே 16- உலகம் முழுவதும் நிறைவேற்றப்பட்ட மரண
தண்டனைகளின் எண்ணிக்கை கடந்த 2022ஆம் ஆண்டு 53 விழுக்காடு
அதிகரித்துள்ளதாக ஜெர்மன் பிரஸ் ஏஜென்சி செய்தி நிறுவனம் கூறியது.

கடந்தாண்டில் 20 நாடுகளில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின்
எண்ணிக்கை 883 ஆகும் என்றும் கடந்த ஐந்தாண்டுகளில் இதுவே
அதிகமான எண்ணிக்கை என்றும் எம்னெஸ்டி இண்டர்ஷேனல் அமைப்பின்
அறிக்கையை மேற்கோள் காட்டி அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவில் நிறைவேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மரண தண்டனைகள்
உலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை மேலும்
அதிகமாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளது. வட கொரியா மற்றும்
வியட்னாமின் இரகசியம் காக்கும் போக்கு மற்றும் இதர பல நாடுகளில்
தகவல்களை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாத நிலை மரண
தண்டனை தொடர்பான தரவுகளை முழுமையாகப் பெறுவதில்
இடையூறை ஏற்படுத்துகின்றன என்று அது கூறியது.

கடந்தாண்டில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளில் 90 விழுக்காடு
ஈரான், சவூதி அரேபியா மற்றும் எகிப்தில் பதிவானவையாகும் எனவும்
அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

கடந்தாண்டில் ஆறு நாடுகள் மரண தண்டனையை முழுமையாக அல்லது
ஒரு பகுதியை ரத்து செய்துள்ளன என்றத் தகவலையும் அது
வெளியிட்டது.

எனினும், ஆப்கானிஸ்தான், குவைத், மியன்மார், பாலஸ்தீனம் மற்றும்
சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றம் கடந்தாண்டும் தொடர்ந்து
அமல்படுத்தப்பட்டது.


Pengarang :