NATIONAL

இவ்வாண்டு சரவாவில் வெறிநாய்க்கடி நோய்க்கு ஒன்பது பேர் பலி- தடுப்பு நடவடிக்கை எடுக்க அமைச்சு வலியுறுத்து

கூச்சிங், மே 16- இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி மே 15ஆம்
தேதி வரை 11 வெறிநாய்க்கடி நோய்ச் சம்பவங்கள் பதிவாகியுள்ள
வேளையில் ஒன்பது பேர் அந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

சரவாக் மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த
வெறிநாய்க்கடி நோய் அடையாளம் காணப்பட்டது முதல் இதுவரை 66
பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் 59 பேர்
உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டத்தோ
டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹசான் கூறினார்.

இவ்வாண்டு அடையாளம் காணப்பட்ட 11 சம்பவங்களில் நான்கு சிபு
மற்றும் செரியானிலும் இரண்டு கூச்சிங்கிலும் ஒன்று பிந்துலுவிலும்
பதிவாகின என்று அவர் சொன்னார்.

இவ்வாண்டு வெறிநாய்க்கடி நோய்க்கு ஆளானவர்களில் எட்டு பேர்
ஏற்கனவே நாய்க்கடிக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவர்
பூனை கடி அல்லது கீறலால் பாதிக்கப்பட்டவர்களாவர் என்று அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

வெறிநாய்க்கடி நோய் என்பது ரேபிஸ் வைரசினால் நரம்பு மண்டலத்திற்குப்
பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வகை நோயாகும். இந்த வைரஸ் மிருகங்களின்          உமிழ்நீரில் காணப்படும். அந்த மிருகங்களால் கடிபடும் போது அல்லது தொடும்          போது அந்த வைரஸ் மனிதர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. அந்த நோய்     மூளையைப் பாதிக்கும் போது உயிர்பலி ஏற்படும் அபாயமும உள்ளது.


Pengarang :