NATIONAL

சாலைப் போக்கு வரத்துத் துறை வெ 5 பில்லியனுக்கும் அதிகமாக  வசூலிக்க இலக்கு 

கோலா திரங்கானு, மே 16 – இந்த ஆண்டு இறுதிக்குள் RM5 பில்லியனுக்கும் அதிகமான வருவாயை வசூலிக்க சாலைப் போக்கு வரத்துத் துறை (JPJ) இலக்கு கொண்டுள்ளது.

சமீபத்தில் சாலைப் போக்கு வரத்துத் துறையால் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளின் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என்று அதன் இயக்குநர் ஜெனரல் டத்தோ ஜைலானி ஹாஷிம் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் சாலைப் போக்கு வரத்துத் துறை சாலை வரி மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மூலம் 60 சதவீதத்திற்கும் அதிகமாக வசூலை ஈட்டுகிறது என்று அவர் கூறினார்.

“கடந்த ஆண்டு நாங்கள் RM4.92 பில்லியன் வசூலித்தோம். இந்த ஆண்டு, போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ள டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களை கணக்கில் கொண்டு RM5 பில்லியனுக்கும் அதிகமாக வசூலிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

“ராயல் மலேசியன் சுங்கத் துறை மற்றும் உள்நாட்டு வருவாய் வாரியம் (IRB) ஆகியவற்றுக்குப் பிறகு ஜேபிஜேயின் வசூல் நாட்டிலேயே மிக அதிகமாக உள்ளது.

கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, ஒரு நாளைக்கு சராசரியாக RM11 மில்லியன் வசூலிக்க முடிந்தது, ”என்று அவர் கூறினார்.

இதுவரை நாடு முழுவதும் 201 ஜேபிஜே கியோஸ்க்குகள் உள்ளதாகவும், தற்போது வரை RM120.7 மில்லியன் வருவாய் இந்த சேவையின் மூலம் வெற்றிகரமாகச் சேகரிக்கப் பட்டுள்ளதாகவும் ஜைலானி கூறினார்.

மே 12 வரை மொத்தம் 9,564 வாகன ஓட்டிகள் அதிகபட்சமாக 10 ஆண்டுகளுக்குத் தங்கள் மலேசிய ஓட்டுநர் உரிமத்தை (எல்எம்எம்) புதுப்பித்துள்ளனர் என்று ஜைலானி கூறினார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி லோக் துவக்கி வைத்த இத்திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்றார்.

ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்குப் புதுப்பித்துக்கொள்வது மட்டுமின்றி, வாகன ஓட்டிகள் 10 சதவீதம் தள்ளுபடி பெறுவதால், செலவையும் மிச்சப்படுத்த முடியும்,” என்றார்.

– பெர்னாமா


Pengarang :