SELANGOR

இலக்குகளை வரைவதில் முதலாவது சிலாங்கூர் திட்டத்தை வழிகாட்டியாகக் கொள்வீர்- மந்திரி புசார் அறிவுறுத்து

ஷா ஆலம், மே 17- திட்டங்கள் அல்லது மேம்பாட்டுக் கொள்கைகளுக்கான
இலக்குகளை வரைவதில் முதலாவது சிலாங்கூர் திட்டத்தை (ஆர்.எஸ்.-1)
வழிகாட்டியாக க் கொள்ளும்படி அரசு துறைகளை மந்திரி புசார்
வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்ட வரைவை உள்ளடக்கிய இந்த
முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் பொருளாதாரத்திற்கு உத்வேகம்
அளிக்கும் வழி முறைகளோடு தொழில்துறை மையமாகவும், விவேக
மாநிலமாகவும் சுபிட்சம் மற்றும் மக்கள் வசிப்பதற்கு உகந்த
மாநிலமாகவும் சிலாங்கூரை உருவாக்குவதற்குரிய வியூகங்களும்
திட்டங்களும் உள்ளடங்கியுள்ளன என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் மாநிலத்தை
மேம்படுத்துவதற்காகவும் சமூக பொருளாதார நிலையை உயர்த்தி மக்கள்
எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் களைவதற்காகவும் நன்கு திட்டமிட்டு
வடிவமைக்கப்பட்ட திட்டமாக இந்த முதலாவது சிலாங்கூர் திட்டம்
விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.

மாநில மேம்பாடு, அடிப்படை வசதிகள், தொழில் துறை மேம்பாடு மற்றும்
பொது போக்குவரத்து ஆகிய திட்டங்களைப் பின்னணியாகக் கொண்ட
பெருத்திட்ட செயலறிக்கையே இந்த முதலாவது சிலாங்கூர் திட்டமாகும்
என்றும் அவர் சொன்னார்.

இது நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட திட்டமாக விளங்குகிறது. அரசாங்கத்
திட்டங்களை மட்டுமின்றி தனியார் மேம்பாட்டுத் திட்டங்களையும் இது
உள்ளடக்கியுள்ளது. பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தில் (ஆர்.எம்.கே.-
12) இடம் பெற்றுள்ள அம்சங்கள் எதுவும் விடுபடாமலிருப்பதை உறுதி
செய்வதை இந்த முதலாவது சிலாங்கூர் திட்டம் நோக்கமாகக்
கொண்டுள்ளது என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் மாநில அரசின் சிறந்த
ஊழியர்களுக்கான விருதளிப்பு விழாவில் உரையாற்றிய போது அவர்
இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :