NATIONAL

ஹிஜ்ரா மூலம் 481 தொழில்முனைவோருக்கு வெ.47 லட்சம் வர்த்தகக் கடனுதவி

ஷா ஆலம், மே 18- யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) வாயிலாக
கடந்த மார்ச் மாதம் 481 தொழில்முனைவோர் வர்த்தகக் கடனுதவியைப்
பெற்றுள்ளனர்.

ஹிஜ்ராவின் ஐ-பிஸ்னஸ் கடனுதவிதி திட்டத்தின் மூலம் மொத்தம் 47
லட்சம் வெள்ளி அந்த தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டதாக அந்த
வர்த்தக கடனுதவிக் கழகத்தின் நடவடிக்கை பிரிவு தலைமை நிர்வாகி
ஷஹாருடின் யாக்கோப் கூறினார்.

வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய விரும்புவோருக்கு குறிப்பாக பெருநாள்
சமயங்களில் நிதி தேவைப்படுவோருக்கு ஹிஜ்ரா தொடர்ந்து உதவி
வழங்கி வந்துள்ளதாக அவர் சொன்னார்.

யாயாசான் ஹிஜ்ரா ஏற்பாட்டில் இங்குள்ள செக்சன் 7, இளைஞர் மற்றும்
விளையாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது
உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ரமலான் மாதத்தின் போது ஐ-பெர்மூசிம் திட்டத்தின் கீழ்
கடனுதவிக்கு விண்ணப்பம் செய்த 15 பேருக்கு 106,000 வெள்ளி
வழங்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.

பெருநாள் சந்தைகளில் வியாபாரம் செய்ய விரும்பும் வணிகர்களுக்கு
உதவும் நோக்கிலான இந்த திட்டத்தின் கீழ் வெ.2,000 முதல் வெ.20,000
வரை கடனுதவி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்ட
வணிகர்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு அறிமுகப்படுத்திய மூன்று
கடனுதவித் திட்டங்களில் இந்த ஐ-பெர்மூசிம் திட்டமும் ஒன்றாகும்.


Pengarang :