NATIONAL

70 லட்சம் பேர் பயன்பெறக்கூடிய மூல நீர் ஆதார உத்தரவாதத் திட்டம் அடுத்தாண்டு தொடங்கும்

கோல சிலாங்கூர், மே 18- நீர் விநியோகத் தடை பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள மூல நீர் ஆதார உத்தரவாதத் திட்டம் அடுத்தாண்டு தொடக்கத்தில் செயல்படும்.

நீர் இறைப்பு பம்ப் இயந்திரங்கள் அமைப்பது, நீர் சேகரிப்பு குளங்களை உருவாக்குவது, நீர் இறைப்பு மற்றும் ஆறுகளை 51 விழுக்காடு அளவுக்கு தடம் மாற்றுவது ஆகிய நான்கு திட்ட தொகுப்புகளை இந்த நீர் ஆதார உத்தரவாதத் திட்டம் உள்ளடக்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் இவ்வாண்டு அக்டோபர் மாத வாக்கில் முற்று பெறும் என எதிர் பார்க்கப் படுகிறது. இதன் செயல்பாடுகளை பரீட்சார்த்த முறையில் சோதிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் அதன் பணிகள் அடுத்தாண்டு தொடக்கத்தில் முழு அளவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

16 லட்சம் வாடிக்கையாளர் கணக்கை உட்படுத்திய சுமார் 70 லட்சம் பேருக்கு நீர் விநியோகம் செய்ய வேண்டியுள்ளதால் இந்த திட்டம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது. அதோ மட்டுமின்றி கிள்ளான் பள்ளத்தாக்கு, புத்ராஜெயா மற்றும் தொழில் துறையினரையும் இந்த நீர் விநியோகத் திட்டம் உள்ளடக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஹோராஸ் எனப்படும் ஆற்றோர நீர் பயன்பாட்டுத் திட்டத்தை நேற்று இங்கு தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு நீர் விநியோகத் தடை பிரச்சனைகளை மாநிலம் பல முறை எதிர்நோக்கியதன் விளைவாக மாநில அரசின் முழு செலவில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :