NATIONAL

10 க்கும் மேற்பட்ட வீடுகள் புயலால் கடுமையாக சேதமடைந்தன

மாராங், மே 18: பெரங்கனில் உள்ள கம்போங் படாங் மெங்குவாங் என்னும் இடத்தில் நேற்று மதியம் வீசிய புயலால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாகச் சேதமடைந்தன.

பிற்பகல் 3.30 மணியளவில் திடீரென பலத்த காற்று வீசியதால் அவரின் வீட்டின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக அம்பாக் முகமட் (79)  கூறினார்.

“இப்போது கனமழை பெய்ய வில்லை, ஆனால் காற்று மிகவும் பலமாக வீசியது மற்றும் அதன் சத்தம் பயமாக இருந்தது,“ என்றார்.

இதற்கிடையில், திரங்கானு மாநில அரசாங்கத்தின் துணை நிறுவனமான டிடிஎம் பெர்ஹாட் மற்றும் மாராங் மாவட்ட மன்றத்தால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வு க்கு அங்கு நிறுவப்பட்ட  ஐந்து பெரிய கூடாரங்களும் காற்றில் அடித்துச் செல்லப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடாரங்களை தவிர, நான்கு மணி நேரம் அமைக்கப்பட்ட பிரதான மேடையும் ஒரே இரவில் இடிந்து விழுந்தது எனப் பெங்கலான் பெரங்கனின் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் சுலைமான் சுலோங் கூறினார்.

“ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வு இன்று மாலை நடைபெற உள்ளதால் நேற்று காலை கூடாரம் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன.

“சம்பவ இடத்தில் புயல் தாக்கியபோது பல அதிகாரிகள் இருந்தனர், ஆனால் அவர்கள் அனைவருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை,” என்று அவர் கூறினார்.

சேதமடைந்த வீடுகள் அனைத்தும் உடனடியாக சீரமைக்கப்பட்டு, சமூக சேவை மைய அலுவலகம் மூலம் உரிய உதவிகள் செய்து தரப்படும் என்றார் அவர்.

– பெர்னாமா


Pengarang :