NATIONAL

காப்புறுதி முகவர் எனக் கூறிக் கொண்ட நபரிடம் பெண் விரிவுரையாளர் வெ.25 லட்சம் இழந்தார்

குவாந்தான், மே 18- காப்புறுதி முகவர் எனக் கூறிக்கொண்ட மக்காவ்
மோடிசக் கும்பலின் வலையில் சிக்கி பெண் விரிவுரையாளர் ஒருவர் 25
லட்சம் வெள்ளியை இழந்தார்.

ஐம்பத்து இரண்டு வயதுடைய அந்தப் பெண்மணி இவ்வாண்டு தொடங்கி
பல்வேறு கட்டங்களில் தனது சேமிப்பு பணத்தை அந்த மோசடிக்
கும்பலிடம் இழந்துள்ளதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ
யாஹ்யா ஓத்மான் கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி அந்த விரிவுரையாளரைத் தொடர்பு
கொண்ட காப்புறுதி நிறுவன பிரதிநிதி எனக் கூறிக் கொண்ட நபர்
பொய்யான பணக்கோரிக்கை மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம்
தொடர்பில் நீங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளீர்கள் எனக் கூறியதாக
டத்தோ யாஹ்யா தெரிவித்தார்.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாகத் தற்காலிகமாக இரு வங்கிக்
கணக்குகளை திறக்கும்படி அந்த பெண்மணிக்கு உத்தரவிட்ட அந்நபர்,
ஏ.டி.எம். இயந்திரத்தின் படம் மற்றும் கடவுச் சொல் உள்ளிட்ட
விபரங்களை தங்களுக்கு அனுப்பும்படி பணித்துள்ளார்.

வங்கியின் சேமிப்பிலிருந்து மொத்த தொகை மற்றும் தாபோங் ஹாஜி,
அமானா சஹாம் பூமிபுத்ரா சேமிப்பு தொகை ஆகியவற்றை அவ்விரு
வங்கிக் கணக்கிற்கு மாற்றும்படி இடப்பட்ட உத்தரவை அப்பெண் ஏற்று
அவ்வாறே செய்துள்ளார் என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

அவ்விரு வங்கிக் கணக்குகளில் இருந்த மொத்த தொகையும் தமது
அனுமதி இல்லாமலே மீட்கப்பட்ட நிலையில் விசாரணையின் முடிவும்
தெரியாத சூழலில் அவ்வாடவரைத் தொடர்பு கொள்ள அம்மாது
முயன்றுள்ளார்.

எனினும் அந்த ஆடவரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் தாம்
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த விரிவுரையாளர் இவ்விவகாரம்
தொடர்பில் நேற்று குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில்
புகார் செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :