SELANGOR

தேர்தல் முடிவு எப்படி இருப்பினும் ஷா ஆலம் விளையாட்டரங்க நிர்மாணிப்பு நிச்சயம் தொடரும்- மந்திரி புசார் உறுதி

ஷா ஆலம், மே 19- வரும் மாநிலத் தேர்தல் முடிவு எப்படி அமைந்தாலும்
ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதியின் நிர்மாணிப்பு (கே.எஸ்.எஸ்.ஏ.)
நிச்சயம் தொடரும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
உறுதியளித்துள்ளார்.

இந்த அரங்க நிர்மாணிப்பு என்பது தனது தனிப்பட்ட முடிவு அல்ல என்றும்
மாறாக, மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சிலாங்கூர் ராஜா மூடா
மற்றும் சிலாங்கூர் விளையாட்டு ரசிகர்களின் விருப்பம் என்றும் அவர்
சொன்னார்.

இந்த விளையாட்டரங்க நிர்மாணிப்பு தேர்தலுக்கு முன்பு அல்லது பின்பு
நடைபெறுமா? என்பது கேள்வியல்ல. பிற்காலத்தில் பிரச்சனைகள்
ஏழாதிருக்க விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டியுள்ளது என்று
அவர் தெரிவித்தார்.

என்ன நடந்தாலும் அரங்கின் நிர்மாணிப்பு தொடரும். சிலாங்கூரிலுள்ள
கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பின் அடிப்படையில் இந்த திட்டம்
முன்னெடுக்கப்படுகிறதே தவிர எனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்
அல்ல. இது தவிர, மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மற்றும் ராஜா
மூடாவின் ஈடுபாடும் இதில் உள்ளது என்றார் அவர்.

ஆகவே, இந்த விளையாட்டரங்க நிர்மாணிப்பு திட்டமிட்டப்படி நடைபெறும்
என்று எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று
இங்குள்ள செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நோன்புப்
பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதியின் நிர்மாணிப்புப் பணிகள்
தேர்தலுக்கு முன்னர் அல்லது பின்னர் தொடங்கப்படுமா என நிருபர்கள்
எழுப்பிய கேள்விக்கு அமிருடின் இவ்வாறு பதிலளித்தார்.

இதனிடையே, இந்த திட்ட நிர்மாணிப்புக்கு உண்டாகும் செலவுக்கு ஈடாக
நிலங்களை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை
எட்டியுள்ளதாக அவர் கூறினார்.


Pengarang :