SELANGOR

பொருளாதாரச் சுமையைக் குறைக்க வாரம் மூன்று நாள் மலிவு விற்பனை- கோத்தா டாமன்சாரா தொகுதி திட்டம்

பெட்டாலிங் ஜெயா, மே 19- கோத்தா டாமன்சாரா தொகுதியில் உள்ள
வசதி குறைந்தவர்களின் நிதிச்சுமையைக் குறைக்க வாரம் மூன்று நாட்கள்
மலிவு விற்பனையை நடத்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
திட்டமிட்டுள்ளார்.

இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்தை மேலும் ஒரு நாள்
அதிகரிப்பதன் மூலம் வாரம் மூன்று முறை இந்த விற்பனையை
இத்தொகுதியில் நடத்துவதற்குத் தாங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தொகுதி
உறுப்பினர் ஷதாரி மன்சோர் கூறினார்.

கோத்தா டாமன்சாரா தொகுதியில் உள்ள வசதி குறைந்த தரப்பினருக்கு
உதவும் நோக்கில் தற்போது வாரம் இருமுறை இந்த மலிவு விற்பனை
நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

கோத்தா டாமன்சாரா, செக்சன் 7 மண்டபத்தில் நேற்று நடைபெற்ற
ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையைப் பார்வையிட்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த மலிவு விற்பனை காலை 10.00 மணிக்குத் தொடங்கிய வேளையில்
சுமார் 400 பேர் காலை 8.00 மணி முதல் பொருள்களை வாங்குவதற்காக
வரிசையில் காத்திருந்தனர்.

இந்த மலிவு விற்பனையில் கலந்து கொள்வதன் மூலம் நியாயமான
விலையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்குரிய
வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளும்படி சுற்றுவட்டார மக்களை
ஷதாரி கேட்டுக் கொண்டார்.

இந்த விற்பனை தொடர்பில் வழக்கமான பணியில் விளம்பரம் செய்யாமல்
புலனம் மூலம் தாமே நேரடியாகப் பொது மக்களுக்கு அழைப்பு
விடுத்த காரணத்தால் இந்த விற்பனையில் அதிகமானோர் கலந்து
கொண்டதாக அவர் சொன்னார்.


Pengarang :