கிள்ளான், பண்டார் பொட்டானிக்கில் வெ.500,000 மதிப்புள்ள போலி மேனி பராமரிப்பு பொருள்கள் பறிமுதல்

ஷா ஆலம், மே 19- பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் பெயரில் போலி
மேனி பராமரிப்பு பொருள்களை விற்பனை செய்து வந்த கும்பலின்
நடவடிக்கையை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின
அமைச்சின் சிலாங்கூர் மாநிலப் பிரிவு முறியடித்துள்ளது.

கிள்ளான், பண்டார் பொட்டானிக்கில் உள்ள விற்பனை மையம் ஒன்றில்
கடந்த திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் 500,000
வெள்ளி மதிப்புள்ள போலி மேனி பராமரிப்பு பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அமைச்சின் சிலாங்கூர் மாநில அமலாக்கப் பிரிவுத் தலைவர் முகமது கைரில் ஜமாலுடின் கூறினார்.

இந்த நடவடிக்கையில் வாசனை திரவியங்கள், மேனி லோஷன் உள்ளிட்ட
37,930 பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த மேனி பராமரிப்பு பொருள்களுக்கான அசல் வர்த்தக முத்திரையின்
உரிமையாளர் செய்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த
சோதனையில் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் சிலாங்கூர் பிரிவைச்
சேர்ந்த எட்டு அமலாக்க அதிகாரிகள் பங்கு கொண்டதாக அவர் சொன்னார்.

இந்த போலி பொருள்களை இணையம் வாயிலாக விற்பனை செய்யும்
நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது அந்த வளாகத்தில்
மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தெரியவந்ததாகவும் அவர்
குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் 2019ஆம் ஆண்டு வர்த்தக முத்திரைச்
சட்டத்தின் 102(1)(சி) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருவதாக கூறிய அவர், இப்பிரிவின் கீழ் குற்றவாளி என
நிரூபிக்கப்படுவோருக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு
பொருளுக்கும் தலா 10,000 வெள்ளி அபராதமும் அபராதத் தொகையைச்செலுத்தத் தவறினால் மூன்றாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும்
விதிக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :